பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் தேனி மாவட்டத்தில் 95.41 சதவீதம் தேர்ச்சி


பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில்  தேனி மாவட்டத்தில் 95.41 சதவீதம் தேர்ச்சி
x
தினத்தந்தி 17 May 2018 12:00 AM GMT (Updated: 17 May 2018 12:00 AM GMT)

பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில், தேனி மாவட்டத்தில் 95.41 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தமிழக அளவில் தேனி மாவட்டம் 9-வது இடத்தை தக்க வைத்துள்ளது.

தேனி

பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை செல்போனில் குறுந்தகவலாக அனுப்பப்படும் என்றும், வீட்டில் இருந்தபடியே முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் இந்த தேர்வை மொத்தம் 128 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 166 மாணவர்கள், 7ஆயிரத்து 622 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 788 பேர் எழுதி இருந்தனர்.

இதில், 6 ஆயிரத்து 739 மாணவர்கள், 7 ஆயிரத்து 370 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 109 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.04 சதவீதம் ஆகும். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.69 சதவீதம் ஆகும். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 95.41 சதவீதம் ஆகும்.

கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் தேனி மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 95.93 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 0.52 சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்து உள்ளது. அதேநேரத்தில், கடந்த ஆண்டு தமிழக அளவில் தேர்ச்சியில் தேனி மாவட்டம் 9-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டும் 9-வது இடத்தை தக்க வைத்துள்ளது.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், உத்தமபாளையம் என 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் 67 பள்ளிகளை சேர்ந்த 7ஆயிரத்து 819 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 7ஆயிரத்து 409 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 94.75 சதவீதம் தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 95.67 சதவீதமாக இருந்தது.

உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் இந்த ஆண்டு 61 பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 969 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி இருந்தனர். இதில் 6 ஆயிரத்து 700 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 96.14 சதவீதம் தேர்ச்சி விகிதம் ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 96.31 சதவீதமாக இருந்தது.

Next Story