விளாத்திகுளம் அருகே சேதம் அடைந்த சாலை பொதுமக்கள் சார்பில் சீரமைப்பு


விளாத்திகுளம் அருகே சேதம் அடைந்த சாலை பொதுமக்கள் சார்பில் சீரமைப்பு
x
தினத்தந்தி 17 May 2018 9:00 PM GMT (Updated: 17 May 2018 2:18 PM GMT)

விளாத்திகுளம் அருகே கமலாபுரம் கிராம பகுதியில் சேதமடைந்த சாலை, பொதுமக்கள் சார்பில் சீரமைக்கப்பட்டது.

விளாத்திகுளம், 

விளாத்திகுளம் அருகே கமலாபுரம் கிராம பகுதியில் சேதமடைந்த சாலை, பொதுமக்கள் சார்பில் சீரமைக்கப்பட்டது.

சேதமடைந்த சாலை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் விளாத்திகுளத்தில் இருந்து எட்டயபுரம் செல்லும் ரோட்டில் 1 கிலோ மீட்டர் தூரத்தில் கமலாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 800–க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கிராமத்துக்கு செல்லும் 1 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த தார் சாலை கடந்த 2013–14–ம் ஆண்டு மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டது.

தற்போது இந்த சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆங்காங்கே குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் இருந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதியடைந்து உள்ளனர். அதிகாரிகளிடம் பலமுறை பொதுமக்கள் வலியுறுத்தி கூறியும் சாலை சீரமைக்கப்படவில்லை.

பொதுமக்கள் சார்பில் சீரமைப்பு

இந்த நிலையில் அந்த 1 கிலோ மீட்டர் தூரம் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணியில் கமலாபுரம் கிராம மக்கள் ஈடுபட்டனர். இதற்காக வீடுதோறும் சாலை சீரமைப்புக்காக தங்களால் இயன்ற தொகையை கொடுத்தனர். இதில் பொதுமக்களிடம் இருந்து ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் வசூல் ஆனது. இந்த தொகையில், சாலையில் உள்ள குண்டும் குழியுமான இடங்களில் சாலை சீரமைக்கப்பட்டது.


Next Story