நெய்வேலியில் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
நெய்வேலியில் நேற்று திடீரென மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெய்வேலி
தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பல மாவட்டங்களில் போதிய அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக கோடை காலத்தில் மழை பெய்யவேண்டும் என்று மக்களும் விவசாயிகளும் எதிர்பார்த்து உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அருகில் உள்ள விழுப்புரம் மாவட்டத்திலும் மழை பெய்தது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் மழை பெய்யவில்லை.
கடலூர் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்ததால் நீர்நிலைகளில் இருந்த தண்ணீர் வற்றி வறண்டு காட்சி அளிக்கிறது. நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் விருத்தாசலம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரை நம்பி சாகுபடி செய்திருந்த நெற்பயிர்களும் மற்ற பயிர்களும் கருகி வருகின்றன.
அனல் காற்று வீசியதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். நமது மாவட்டத்திலும் கோடை மழை பெய்யாதா? என்ற விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் நெய்வேலியில் நேற்று மதியம் 2 மணி அளவில் வானில் கருமேகக்கூட்டங்கள் கூடியது. பின்னர் திடீரென மழை பெய்ய தொடங்கியது. 2.30 மணி வரை பலத்த மழையாக பெய்தது. இதனால் பாதசாரிகள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. அதன்பிறகு 3 மணி வரை தூறிக்கொண்டே இருந்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் ஓடியது.
இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து, பூமி குளிர்ந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story