ஜமாபந்தி தொடக்கம்: திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூரில் 422 மனுக்கள் பெறப்பட்டன


ஜமாபந்தி தொடக்கம்: திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூரில் 422 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 18 May 2018 4:00 AM IST (Updated: 18 May 2018 3:17 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூரில் நடந்த ஜமாபந்தியில் 422 மனுக்கள் பெறப்பட்டன.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தாலுகாவில் நேற்று ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி தலைமை தாங்கினார். தாசில்தார் மனோகரன், சமூகப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரமேஷ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை நில அளவர் மோகன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் நாயுடுமங்கலம் உள்வட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 212 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மண்டல துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர்கள் மணிகண்டன், சுசிலா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) திருவண்ணாமலை வடக்கு உள்வட்ட கிராமங்களுக்கும், 21-ந் தேதி துரிஞ்சாபுரம் உள்வட்ட கிராமங்களுக்கும், 22-ந் தேதி தச்சம்பட்டு உள்வட்ட கிராமங்களுக்கும், 23-ந் தேதி மங்கலம் உள்வட்ட கிராமங்களுக்கும், 24-ந் தேதி திருவண்ணாமலை தெற்கு உள்வட்ட கிராமங்களுக்கும், 28-ந் தேதி வெறையூர் உள்வட்ட கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடக்கிறது என்று தாசில்தார் மனோகரன் தெரிவித்தார்.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். தாசில்தார் ஜெயப்பிரகாஷ் நாராயணன் வரவேற்றார்.

வேட்டவலம் உள்வட்டத்தை சேர்ந்த 26 கிராமபொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 210 மனுக்களை கொடுத்தனர்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முருகன், வட்ட வழங்கல் அலுவலர் ஜான்பாஷா, தலைமையிடத்து துணை தாசில்தார் சீத்தாராமன், தலைமையிடத்து நில அளவர் சையத்ஜலால், மண்டல துணை தாசில்தார் பரிமளா, வேட்டவலம் வருவாய் ஆய்வாளர் பர்வீன்பானு மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவர்கள், கிராம உதவியாளர்களும் கலந்து கொண்டனர். 

Next Story