கர்நாடகத்தின் 23-வது முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்றார்


கர்நாடகத்தின் 23-வது முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்றார்
x
தினத்தந்தி 18 May 2018 4:32 AM IST (Updated: 18 May 2018 4:32 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தின் 23-வது முதல்- மந்திரியாக எடியூரப்பா நேற்று பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் வஜூபாய்வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

எடியூரப்பா  விவசாயிகளின் ரூ.1 லட்சம் பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

அதாவது, 104 தொகுதிகளில் பா.ஜனதாவும், 78 தொகுதிகளில் காங்கிரசும், 37 தொகுதிகளில் ஜனதாதளம் (எஸ்) கட்சியும், இதன் கூட்டணி கட்சியான பகுஜன்சமாஜ் கட்சி ஒரு இடத்திலும், 2 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால், காங்கிரஸ் கட்சி தானாக முன்வந்து ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தது. இதனால் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) அணி சார்பில் எச்.டி.குமாரசாமி தன்னை ஆட்சி அமைக்க அழைக்க கோரி கவர்னர் வஜூபாய் வாலாவிடம் கடி தம் கொடுத்தார். அதுபோல் 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பா.ஜனதா சார்பில் எடியூரப்பா, கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதனால் கவர்னர் எந்த கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கிடையே சட்டவல்லுனர்களுடன் கவர்னர் எந்த கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசித்தார். அதன் பின்னர் நேற்று முன்தினம் இரவு, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். மேலும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் வழங்கியும் கவர்னர் உத்தரவிட்டார்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி நள்ளிரவில் சுப்ரீம் கோர்ட்டு பதிவாளரிடம் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அதில், எடியூரப்பா கர்நாடக முதல்-மந்திரியாக பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. அந்த மனு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, போபடே, அசோக் பூஷன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்பதற்கு தடை விதிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர். அதோடு எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரிடம் தாக்கல் செய்த கடிதத்தை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதோடு விசாரணையை இன்றைக்கு(வெள்ளிக்கிழமை) ஒத்தி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து நேற்று காலை பதவி ஏற்பு விழா பெங்களூருவில் கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க செல்வதற்கு முன்பு எடியூரப்பா, டாலர்ஸ் காலனி உள்ள தனது வீட்டில் சிறப்பு பூஜை செய்தார். பின்னர் சஞ்சய்நகரில் உள்ள ராதைகிருஷ்ணா கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். அதையடுத்து அவர் அங்கிருந்து கார் மூலம் கவர்னர் மாளிகைக்கு வந்தார். அவருடன் அவரது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா, மத்திய மந்திரிகள் சதானந்தகவுடா, பிரகாஷ் ஜவடேகர், பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் வந்தனர்.

எடியூரப்பா, சரியாக காலை 9 மணிக்கு பதவி ஏற்பு விழா மேடைக்கு சென்றார். அவரை கவர்னர் வஜூபாய் வாலா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன் பிறகு பதவி ஏற்பு விழா நிகழ்வில், பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதுடன், நாதஸ்வர இசை முழங்க சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதைத்தொடர்ந்து தேசிய கீதத்துடன் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. எடியூரப்பாவுக்கு கவர்னர் வஜூபாய் வாலா முதல்-மந்திரியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கர்நாடகத்தின் 23-வது முதல்-மந்திரியாக அவர் பொறுப்பு ஏற்றார். 75 வயது நிரம்பிய எடியூரப்பா 3-வது முறையாக முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் எடியூரப்பா ரகசிய காப்பு உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார். எடியூரப்பா, கடவுள் மற்றும் விவசாயி மேல் ஆணையாக எனக் கூறி பதவிப்பிரமாணம் செய்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள், ‘மோடி... மோடி’ என கோஷம் எழுப்பி மகிழ்ந்தனர். பின்னர் எடியூரப்பாவுக்கு பூங்கொத்து கொடுத்த கவர்னர் வஜூபாய்வாலா வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர் தேசீய கீதம் இசைக்கப்பட்டது. அத்துடன் 5 நிமிடங்களில் பதவி ஏற்பு விழா நிகழ்வு நிறைவு பெற்றது. இதில் மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், அனந்தகுமார், சதானந்தகவுடா, முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட பா.ஜனதாவின் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர். பதவி ஏற்றபோது எடியூரப்பா தனது தோளில் விவசாயிகளின் தோழன் என்பதை வெளிக்காட்டும் விதமாக பச்சை துண்டு போட்டு இருந்தார். விழா நடைபெற்ற அரங்கில் பசுமை தரை விரிப்பான் போடப்பட்டு இருந்தது.

அதையடுத்து முதல்-மந்திரி எடியூரப்பா, விதானசவுதாவுக்கு சென்றார். அவர் விதானசவுதா பட்டிக்கட்டுகளை கைகளால் தொட்டு வணங்கினார். பின்னர் விதானசவுதாவில் உள்ள முதல்-மந்திரி அறைக்கு சென்ற அவர் சிறப்பு பூஜை செய்தார். பூஜை முடிவடைந்ததை தொடர்ந்த முதல்-மந்திரி நாற்காலியில் அவர் அமர சென்றார். அப்போது 3 தடவை தனது இரு கைகளால் முதல்-மந்திரி நாற்காலியை தொட்டு வணங்கிய பிறகு அதில் அமர்ந்தார். எடியூரப்பா, விவசாயிகளின் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இதுகுறித்து விவரங்களை சேகரித்து வழங்குமாறு தலைமை செயலாளருக்கு அவர் உத்தரவிட்டார். இந்த விவரங்கள் கிடைத்த பிறகு அடுத்த 2 நாட்களில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எடியூரப்பா அறிவித்தார்.

முதல்-மந்திரியாக பதவி ஏற்ற எடியூரப்பாவுக்கு, தலைமை செயலாளர் ரத்னபிரபா, அரசு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், பா.ஜனதா தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

Next Story