காரமடை அருகே தோட்டத்துக்குள் புகுந்து ஆட்டை கடித்துக்கொன்ற சிறுத்தைப்புலி கிராம மக்கள் அச்சம்


காரமடை அருகே தோட்டத்துக்குள் புகுந்து ஆட்டை கடித்துக்கொன்ற சிறுத்தைப்புலி கிராம மக்கள் அச்சம்
x
தினத்தந்தி 18 May 2018 11:42 PM GMT (Updated: 18 May 2018 11:42 PM GMT)

காரமடை அருகே தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தைப்புலி, அங்கிருந்த ஆட்டை கடித்துக் கொன்றது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள வெள்ளியங்காடு அருகே சந்தனபுரம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 72), விவசாயி. இவர் நேற்று காலை 11 மணியளவில் தோகைமலை என்கிற மொக்கைக்காடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது திடீர் என ஒரு செம்மறி ஆடு தொடர்ந்து கத்தும் சத்தம் கேட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெரியசாமி அங்கு சென்று பார்த்தார். அப்போது சிறுத்தைப்புலி ஒன்று ஆட்டை கடித்துக்கொன்று மழைநீர் செல்வதற்காக வெட்டப்பட்ட வாய்க்கால் வழியாக அதன் உடலை தூக்கிக்கொண்டு ஓடியது. உடனே அவர் சத்தம் போட்டு கொண்டே ஓடினார். இதனால் சிறுத்தைப்புலி ஆட்டை கீழே போட்டுவிட்டு தோகைமலைப்பகுதிக்குள் சென்றது.

தகவல் அறிந்த காரமடை வனச்சரக அலுவலர் சரவணன், வனவர் சுரேஷ், வனக்காப்பாளர் முனுசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த ஆட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் ஆட்டை பிரேத பரிசோதனை செய்வதற்காக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பிரேத பரிசோதனைக்கு பின்னர்தான் ஆடு இறந்ததற்கான காரணம் தெரியவரும். வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க அந்த பகுதியில் கேமரா பொருத்தப்படும் என்றனர்.

இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:–

காரமடை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் சிறுத்தைப்புலி நடமாட்டம் அதிகரித்து உள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு காரமடை அருகே மேடூரில் பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்துக்கொன்றது. கட்டாஞ்சி மலைப்பகுதியில் கரடி ஒன்று விவசாயியை தாக்கியது.

தற்போது சிறுத்தைப்புலி ஒரு ஆட்டை கடித்துக்கொன்று உள்ளது. தொடரும் இந்த சம்பவங்கள் கிராமமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும். இறந்த ஆடுகளுக்கு அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story