கோவையிலிருந்து சார்ஜா சென்ற விமானத்தில் கஞ்சா எடுத்து செல்ல முயன்ற சூடான் மாணவர் சிக்கினார்


கோவையிலிருந்து சார்ஜா சென்ற விமானத்தில் கஞ்சா எடுத்து செல்ல முயன்ற சூடான் மாணவர் சிக்கினார்
x
தினத்தந்தி 19 May 2018 9:15 PM GMT (Updated: 19 May 2018 7:30 PM GMT)

கோவையிலிருந்து சார்ஜா சென்ற விமானத்தில் கஞ்சா எடுத்து செல்ல முயன்ற சூடான் மாணவர் ஒருவர் சிக்கினார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கோவை,

கோவையிலிருந்து சார்ஜா செல்லும் ‘ஏர் அரேபியா’ விமானம் நேற்று அதிகாலை 4.15 மணிக்கு கோவை வந்தது. அதிலிருந்து பயணிகள் இறங்கிய பின்னர் அந்த விமானம் மீண்டும் சார்ஜா செல்ல தயாரானது. அப்போது அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் பேண்ட் பாக்கெட்டில் ஒரு பொட்டலம் இருந்தது. அதை பாதுகாப்பு படையினர் பிரித்து பார்த்த போது அதில் 50 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விமானத்தில் கஞ்சா கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த பயணி பீளமேடு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

விசாரணையில், அவர் சூடான் நாட்டை சேர்ந்த முகமது தாரிக்(வயது 22) என்றும், இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. ஐ.டி. முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இவர் கல்லூரி முடிந்து கோடை விடுமுறைக்கு தனது சொந்த நாடான சூடான் செல்வதற்காக ஏர்அரேபியா விமானத்தில் சார்ஜா சென்று அங்கிருந்து தனது சொந்த நாடு செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவர் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த 50 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதால் அவர் விமான பயணத்தை தொடரமுடியவில்லை.

இதைத் தொடர்ந்து முகமது தாரிக் மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘அதிக அளவில் கஞ்சா வைத்திருந்தால் ஜாமீன் கிடையாது. ஆனால் விமான பயணி 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததால் அவர் மீது சாதாரண பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்’ என்றனர்.


Next Story