நந்தன் கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு


நந்தன் கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 24 May 2018 4:15 AM IST (Updated: 24 May 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

நந்தன் கால்வாய் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

விழுப்புரம்

நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்கவும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்யக்கோரியும், நதிகளின் குறுக்கே தடுப்பணைகளை அமைக்க வேண்டும், ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அதன் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், கடந்த மார்ச் 1-ந் தேதி கன்னியாகுமரியில் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினர்.

இவர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் விழுப்புரம் வந்தனர். விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் விழிப்புணர்வு பயணம் சென்ற இவர்கள், நேற்று மதியம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் அய்யாக்கண்ணு ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கொடுக்காமலும், சாகுபடி செய்ய தண்ணீர் கொடுக்காமலும் மத்திய, மாநில அரசு ஏமாற்றி வருவதால் வாங்கிய கடன்களை கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இனியும் இந்த நிலை ஏற்படாமல் இருக்க மத்திய அரசு, அனைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆறுகளில் தடுப்பணை கட்டவும், வரத்து வாய்க்கால்களை தூர்வாரவும் வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைக்கவும், 60 வயது நிரம்பிய விவசாயிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் ஓடும் தென்பெண்ணை ஆற்றை கெடிலம் ஆற்றோடு இணைக்க வேண்டும். வீடூர் அணையை காப்பாற்ற நந்தன் கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது மனுவை பெற்ற கலெக்டர், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Next Story