மாநில அளவில் சிவகங்கை முதலிடம் பிடித்து சாதனை 98.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
10-ம் வகுப்பு தேர்வில் முதன்முறையாக மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பெற்று சாதனை படைத்தது. 98.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிவகங்கை
10-ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியானது. சிவகங்கை மாவட்டம் முழுவதும் 10-ம் வகுப்பு தேர்வை 9 ஆயிரத்து 395 மாணவர்களும், 9 ஆயிரத்து 442 மாணவிகளும் என 18 ஆயிரத்து 837 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 9 ஆயிரத்து 182 மாணவர்களும், 9 ஆயிரத்து 373 மாணவிகளும் என 18 ஆயிரத்து 555 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அத்துடன் சிவகங்கை மாவட்டம் 98.5 சதவீத தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
மாவட்டத்தில் சிவகங்கை மற்றும் தேவகோட்டை ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 926 மாணவர்களும், 4 ஆயிரத்து 165 மாணவிகளும் என 8 ஆயிரத்து 91 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 3 ஆயிரத்து 844 மாணவர்களும், 4 ஆயிரத்து 137 மாணவிகளும் என 7 ஆயிரத்து 981 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோன்று தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 469 மாணவர்களும், 5 ஆயிரத்து 277 மாணவிகளும் என 10 ஆயிரத்து 746 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 5 ஆயிரத்து 338 மாணவர்களும், 5 ஆயிரத்து 236 மாணவிகளும் என 10 ஆயிரத்து 574 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் கடந்த 1985-ம் ஆண்டு புதிதாக ஏற்படுத்தப்பட்டது. மாவட்டம் உருவான பின்னர் தற்போது தான் 10-ம் வகுப்பு தேர்வில் முதல் முறையாக மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை முதன்மைக்கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயசாமி தெரிவித்தார்.
Related Tags :
Next Story