திருப்பனந்தாள் அருகே காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்


திருப்பனந்தாள் அருகே காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 24 May 2018 11:00 PM GMT (Updated: 24 May 2018 8:19 PM GMT)

திருப்பனந்தாள் அருகே மின்சாரம் மற்றும் குடிநீரை சீராக வழங்ககோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே பட்டம் கிராமத்தில் மாவுத்திருப்பு, குடியானத்தெரு, ஆதிதிராவிடர் தெரு, மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மின்வினியோகம் இல்லாததால், அங்கு உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. பேரூராட்சி நிர்வாகம் ஜெனரேட்டர் மூலம் மின்மோட்டாரை இயக்கி குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்த நிலையிலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லை. குடிநீருக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வந்ததால் கிராம மக்கள் மிகவும் அவதிக்கு ஆளாயினர். மின்வினியோகம் இல்லாததால் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில் டிரான்ஸ்பார்மரை பழுது நீக்கி மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகத்தை சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பட்டம் கிராம மக்கள் அப்பகுதியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மின் வாரிய அதிகாரி சிற்றரசு, பேருராட்சி செயல் அதிகாரி வெள்ளையம்மாள் மற்றும் திருப்பனந்தாள் போலீசார் அங்கு சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகத்தை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

அதன்பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக சென்னை-கும்பகோணம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Next Story