பண்ணாரி அம்மன் கோவிலில் 44 நாட்களில் ரூ.1 கோடி காணிக்கை


பண்ணாரி அம்மன் கோவிலில் 44 நாட்களில் ரூ.1 கோடி காணிக்கை
x
தினத்தந்தி 25 May 2018 12:04 AM GMT (Updated: 25 May 2018 12:04 AM GMT)

பண்ணாரி அம்மன் கோவிலில் 44 நாட்களில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1½ கோடி செலுத்தி இருந்தார்கள். மேலும் 730 கிராம் தங்கமும், 1,187 கிராம் வெள்ளியும் இருந்தது.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் பண்ணாரி கோவிலுக்கு சென்று, அம்மனை தரிசனம் செய்வார்கள். அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதேபோல் பங்குனி மாதம் பிரசித்தி பெற்ற குண்டம் விழா நடக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு வேண்டுதல் நிறைவேற்றுவார்கள்.

கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 20 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை இந்த உண்டியல்கள் திறந்து எண்ணப்படும்.

கடந்த மாதம் 10-ந் தேதி உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அதன்பின்னர் 44 நாட்கள் கழித்து நேற்று முன்தினம் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ண முடிவு செய்யப்பட்டன. அதன்படி திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹர்ஷினி, பண்ணாரி கோவில் அதிகாரி பழனிக்குமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டன.

மொத்தம் 20 உண்டியல்களிலும் சேர்த்து 1 கோடியே 49 ஆயிரத்து 865 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தார்கள். இது தவிர 730 கிராம் தங்கம். 1,187 கிராம் வெள்ளி ஆகியவையும் இருந்தன.

உண்டியல் எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், அறங்காவலர்கள், மகளிர் குழுவினர் ஈடுபட்டனர்.

Next Story