சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை சகஜ நிலைக்கு திரும்பியது


சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை சகஜ நிலைக்கு திரும்பியது
x
தினத்தந்தி 26 May 2018 11:00 PM GMT (Updated: 26 May 2018 7:39 PM GMT)

கோபத்தில் பாகனை கொன்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை சகஜ நிலைக்கு திரும்பியது. அது மற்றொரு யானை மூலம் சாந்தப்படுத்தப்பட்டது.

சமயபுரம்,

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் யானை மசினி, பாகன் கஜேந்திரனை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாகன் நடவடிக்கையில் கோபமடைந்த யானை அவரை தூக்கி வீசி காலால் மிதித்து கொன்றது. யானையின் கோபத்தை தணிக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தனர். யானையின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து சாந்தப்படுத்தினர். மேலும் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை உள்ளிட்ட கோவில்களின் பாகன்கள் வரவழைக்கப்பட்டு, யானையிடம் அதன் பாஷையில் பேசி சமாதானப்படுத்தப்பட்டது.

இரும்பு சங்கிலிகளால் கால்களை கட்டி நகராமல் இருக்கும் படி அவற்றை தூண்களில் கட்டி வைத்தனர். நேற்று முன்தினம் பகல் 12.20 மணி அளவில் மசினி யானை கட்டி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயா, விஜயா ஆகிய தனியார் யானைகள் வரவழைக்கப்பட்டன. இதில் ஜெயா யானை, மசினி யானையுடன் அனுப்பி பேச வைக்கப்பட்டது. அப்போது ஜெயா தும்பிக்கையால் மசினியை தொட்டு சாந்தப்படுத்தியது. அப்போது மசினி யானை பிளிறியதால், அதை ஜெயா தொடர்ந்து ஆசுவாசப்படுத்தியது.

பின்னர் மசினி யானை கோவிலில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, மாகாளிக்குடியில் உள்ள உஜ்னி மாகாளியம்மன் கோவில் வளாகத்தில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அதன் சங்கிலிகள் அவிழ்க்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு 9.15 மணி அளவில் கோவிலின் உள்ளே இருந்து மசினி யானை வெளியே அழைத்து வரப்பட்டது. பின்னர் மாகாளிக்குடியில் உஜ்னி மாகாளியம்மன் கோவில் வளாகத்தில் யானை கட்டி வைக்கப்பட்டது. அங்கு யானை சகஜ நிலைக்கு திரும்பினாலும், பாதுகாப்பு கருதி யானையை பார்வையிட பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவிலில் நேற்று காலை நடைபெற்ற பூஜைக்கும் யானை பயன்படுத்தப்படவில்லை.

இந்தநிலையில் முதுமலையில் இருந்து வன கால்நடை பராமரிப்பு டாக்டர் மனோகர் தலைமையில், டாக்டர் சிவக்குமார், சென்ன கேசவன், பிரசன்னா, கணேசன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் நேற்று காலை சமயபுரம் வந்தனர். அவர்கள் யானையை பரிசோதித்தனர்.கோவிலில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை டாக்டர்கள் குழுவினர், கோவில் அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது யானை பக்தர்களுக்கு நல்ல முறையில் தான் ஆசி வழங்கி கொண்டிருந்தது தெரிந்தது. அது திடீரென கோபமடைந்ததற்கான காரணம் அதில் தெளிவாக தெரியவில்லை.

இதுகுறித்து கோவில் இணை ஆணையர் குமரதுரை கூறுகையில், “மசினி யானையை பராமரிக்க மற்ற கோவில் யானை பாகன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். யானை சகஜ நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மசினியை முதுமலை வனப்பகுதி கொண்டு செல்ல வேண்டுமா? அல்லது கோவிலிலேயே வைத்து பராமரிக்கலாமா? என்பதை அரசு உயர் அதிகாரிகள் தான் முடிவு செய்வார்கள்” என்று அவர் கூறினார்.

Next Story