மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி பொதுமக்கள் போராட்டம்


மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 26 May 2018 11:57 PM GMT (Updated: 26 May 2018 11:57 PM GMT)

டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரி பார்த்தபோது மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர்,

எண்ணூர் தாழங்குப்பத்தைச் சேர்ந்தவர் சிவகுமார்(வயது 50). இவர், திருவொற்றியூர் காலடிபேட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை பட்டினத்தார் கோவில் பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து சிவகுமார் உள்ளிட்ட 4 மின்வாரிய ஊழியர்கள், அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மின்சாரம் தாக்கியதில் சிவகுமார் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்ததும் சக ஊழியர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். தாழ்வாக இருக்கும் இந்த மின்சார டிரான்ஸ்பார்மரால் 20-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளன. தற்போது மின்வாரிய ஊழியரும் மின்சாரம் தாக்கி இறந்து விட்டார்.

எனவே இந்த டிரான்ஸ்பார்மரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கூறி பொதுமக்கள் அனைவரும் அந்த பகுதியில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருவொற்றியூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்து, அனைவரையும் அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.

பின்னர் பலியான சிவகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலியான சிவகுமாருக்கு அனிதா என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

Next Story