டெல்லியில் காங். தலைவர்களுடன் குமாரசாமி ஆலோசனை


டெல்லியில் காங். தலைவர்களுடன் குமாரசாமி ஆலோசனை
x
தினத்தந்தி 28 May 2018 11:31 PM GMT (Updated: 28 May 2018 11:31 PM GMT)

மந்திரிசபையில் இலாகாக்களை பங்கிட்டு கொள்வது குறித்து டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைவர்களுடன் குமாரசாமி ஆலோசனை நடத்தினார். மேலும் பிரச்சினைகள் இல்லாமல் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது. மந்திரிசபையில் காங்கிரசுக்கு 22 இடங்களும், ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு 12 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இலாகாக்களை பங்கிட்டு கொள்வது தொடர்பாக 2 கட்சிகளுக்கும் இடையே இணக்கமான முடிவு ஏற்படவில்லை. ஏனெனில் நிதித்துறை, நீர்ப்பாசனத்துறை, மின்சாரம், பொதுப்பணி உள்ளிட்ட முக்கிய துறைகளை காங்கிரஸ் கேட்கிறது. ஆனால் அந்த இலாகாக்களை தங்களுக்கே வழங்க வேண்டும் என்று ஜனதாதளம்(எஸ்) கட்சி கூறி வருகிறது.

இதன் காரணமாக மந்திரிசபை விரிவாக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக கடந்த 26-ந் தேதி கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள், ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தினார்கள். அதே நேரத்தில் நேற்று முன்தினம் ராகுல்காந்தி வெளிநாட்டுக்கு செல்லும் முன்பாக மந்திரிசபை விரிவாக்கம் செய்வதில் உள்ள பிரச்சினைக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வுகாண காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்திடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்-மந்திரி குமாரசாமி டெல்லி சென்றுள்ளார். முன்னதாக நேற்று காலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்தை குமாரசாமி சந்தித்து பேசினார். அப்போது மந்திரிசபை விரிவாக்கம், இலாகாக்களை பங்கிட்டு கொள்வது தொடர்பாக குலாம்நபி ஆசாத்துடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை முடிந்ததும் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் எந்த பிரச்சினைகளும் இல்லாமல் பேச்சு வார்த்தை நடத்தி மந்திரிசபை விரிவாக்கம் செய்ய தீர்மானித்துள்ளன. மந்திரிசபை விரிவாக்கத்தில் உள்ள சிக்கல்கள் நாளைக்குள் (அதாவது இன்று) சரியாகி விடும் என்று நம்புகிறேன். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அவர் டெல்லிக்கு திரும்பியதும் மந்திரிசபை விரிவாக்கம் செய்யும் தேதி பற்றி முடிவு எடுக்கப்படும்.

குலாம்நபி ஆசாத்துடன் மந்திரிசபை விரிவாக்கம், இலாகாக்கள் பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தி உள்ளேன். மந்திரிசபை விரிவாக்கத்திற்கு முன்பாக அனைவருடனும் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும். ஒருதலைபட்சமாக எந்த முடிவும் எடுக்கப்படாது. நிதி மந்திரி பதவியை 2 கட்சிகளும் கேட்கிறது. அதுபற்றி ராகுல்காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படும். கூட்டணி ஆட்சியில் இலாகாக்களை பங்கிட்டு கொள்வதில் பிரச்சினை ஏற்படுவது வழக்கமான ஒன்று தான்.

எனக்கு 6½ கோடி மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்று தான் கூறினேன். ஆனால் 6½ கோடி மக்களின் முதல்-மந்திரி இல்லை என்று கூறவில்லை. இந்த விவகாரத்தில் கன்னட மக்களை நான் அவமானப்படுத்தி விட்டதாக கூறுவது தவறானதாகும். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான முதல்-மந்திரி நான் அல்ல. நான் 6½ கோடி மக்களின் முதல்-மந்திரி என்பதை தெளிவாக கூறிக் கொள்கிறேன்.

ஒரு திட்டத்தை அறிவிப்பது, வளர்ச்சி திட்டங்களை தொடங்குவது உள்ளிட்ட விவகாரங்களில் நான் எந்த ஒரு முடிவு எடுத்தாலும், அதற்கு முன்பாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து தான் இறுதி செய்ய முடியும். காங்கிரஸ் தயவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளோம், நான் முதல்-மந்திரி ஆகியுள்ளேன்.” இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story