ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம்: முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி


ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம்: முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி
x
தினத்தந்தி 1 Jun 2018 4:45 AM IST (Updated: 1 Jun 2018 4:31 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் ரேஷன்கடை ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

புதுச்சேரி

புதுவையில் உள்ள 315 ரேஷன் கடைகளில் 630 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 18 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், புதுவை அரசின் கொள்கை முடிவுப்படி குடிமைப்பொருள் வழங்கல் துறையின் மூலமாக சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கடந்த 25-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக நேற்று கேபினட் அறையில் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் அதிகாரிகள், ரேஷன் கடை ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி, 3 மாத சம்பளம் வழங்குவதாகவும், அதற்கும் ஒரு வார கால அவகாசம் வேண்டும், உடனடியாக பொதுமக்களுக்கு அரிசியை வினியோகம் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் ஊழியர்கள் 5 மாத சம்பளம் வழங்க வேண்டும், சம்பளம் வழங்கிய பின்னரே அரிசி வழங்குவோம் என்று தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

எனவே அவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக இலவச அரிசி பெற முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story