புத்தக திருவிழாவையொட்டி மாணவர்களுக்கு உண்டியல் வழங்கும் நிகழ்ச்சி


புத்தக திருவிழாவையொட்டி மாணவர்களுக்கு உண்டியல் வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 8 Jun 2018 10:30 PM GMT (Updated: 8 Jun 2018 8:49 PM GMT)

கரூரில் புத்தக திருவிழாவையொட்டி மாணவர்களுக்கு உண்டியல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த உண்டியலில் சேமிக்கப்படும் தொகையின் இருமடங்கு மதிப்புக்கு புத்தகங்களை வாங்கி செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது.

கரூர்,

கரூர் மாவட்ட மைய நூலகம், பள்ளிக்கல்வி துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் உள்ளிட்டவற்றின் சார்பில் கரூர் பிரேம் மகாலில் வருகிற 13-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 2-வது புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி பள்ளி மாணவ- மாணவிகளிடையே புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி புத்தக திருவிழாவில் தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்கி அவர்களை பயனடைய செய்யும் பொருட்டு கரூர் காகித ஆலை நிறுவனம் சார்பில் துணிப்பை போன்ற உண்டியல் வழங்கும் நிகழ்ச்சி கரூர் வெண்ணைமலையில் உள்ள சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் பழனியப்பன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் ஜான்பாஷா, நிர்வாகி தீபம் உ.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாவட்ட கல்வி அதிகாரி சாமிநாதன் பேசுகையில், மாணவர்களின் அறிவுத்திறமையை வளப்படுத்துவதற்கு புத்தக வாசிப்பு என்பது இன்றியமையாதது ஆகும். சொத்து சேர்ப்பதை விட புத்தகங்களை சேர்த்து வைத்தால் அது நமக்கு மட்டும் பயன்தருவதோடு, நாம் அடுத்தவர்களுக்கு கற்பிப்பதன் மூலம் அது விரிவடையும். சுமார் 2 லட்சம் மாணவர்கள் இந்த புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு பயன்பெறுவார்கள் என நம்புகிறேன். இதனால் மாணவர்களது அறிவாற்றலும், நினைவாற்றலும் பெருகும் என்று கூறினார்.

அதனை தொடர்ந்து துணிப்பை போன்ற உண்டியல் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு இந்த உண்டியல் வினியோகிக்கப்பட இருக்கிறது. இந்த உண்டியலில் பணம் சேமித்து வைத்து கொண்டு, புத்தக திருவிழாவிற்கு வந்து அந்த தொகையின் இரண்டு மடங்கு மதிப்பிற்கு புத்தகம் வாங்கி செல்லலாம். எடுத்துக்காட்டாக உண்டியலில் ரூ.100 சேமித்தால் ரூ.200-க்கு புத்தகங்கள் வழங்கப்படும். 20 ஆயிரம் உண்டியல் வழங்கப்பட உள்ளது என புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இதேபோல் மாணவர்களுக்கு ஒன்றிய அளவில் கட்டுரை, கவிதை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு அறிவார்ந்த புத்தகங்கள் அடங்கிய பரிசுகள் வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் வா.செ.குழந்தைசாமி கல்வி ஆய்வு அறக்கட்டளை அமைப்பாளர் ப.தங்கராசு, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மா.காமராஜ், கரூர் தமிழ்நாடு காகித ஆலை நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் ரகுபதி, பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story