மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் ஆட்டம் காணும் கூட்டணி ஆட்சி துணை முதல்–மந்திரி பதவி கேட்டு எம்.பி.பட்டீல் பிடிவாதம் குமாரசாமி நேரில் சந்தித்து சமரசம் + "||" + Asking the deputy prime minister's post Embattled stubbornness Coomaraswamy met in person and compromise

கர்நாடகத்தில் ஆட்டம் காணும் கூட்டணி ஆட்சி துணை முதல்–மந்திரி பதவி கேட்டு எம்.பி.பட்டீல் பிடிவாதம் குமாரசாமி நேரில் சந்தித்து சமரசம்

கர்நாடகத்தில் ஆட்டம் காணும் கூட்டணி ஆட்சி துணை முதல்–மந்திரி பதவி கேட்டு எம்.பி.பட்டீல் பிடிவாதம் குமாரசாமி நேரில் சந்தித்து சமரசம்
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி ஆட்டம் கண்டு வருகிறது. மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள எம்.பி.பட்டீலை, முதல்–மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்து சமரசம் செய்தார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி ஆட்டம் கண்டு வருகிறது. மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள எம்.பி.பட்டீலை, முதல்–மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்து சமரசம் செய்தார். அப்போது தனக்கு துணை முதல்–மந்திரி பதவி வேண்டும் என்று எம்.பி.பட்டீல் பிடிவாதம் பிடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூட்டணி ஆட்சி

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 தொகுதியிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனால் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைத்தது. எடியூரப்பா முதல்–மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்தது. குமாரசாமி முதல்–மந்திரியாகவும், மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதல்–மந்திரியாகவும் கடந்த மே மாதம் 23–ந் தேதி பதவி ஏற்றனர். அதைத்தொடர்ந்து கடந்த 6–ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது.

மந்திரி பதவிகூட கிடைக்கவில்லை

காங்கிரஸ் சார்பில் 15 பேரும், ஜனதா தளம்(எஸ்) சார்பில் 10 பேரும் என மொத்தம் 25 எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர். காங்கிரஸ் கட்சியில் சிலரை தவிர முன்னணி தலைவர்களுக்கு மந்திரி வாய்ப்பு கிடைக்கவில்லை. அதாவது எம்.பி.பட்டீல், எச்.கே.பட்டீல், ராமலிங்கரெட்டி, எஸ்.ஆர்.பட்டீல் உள்ளிட்டோருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. எம்.பி.பட்டீல் தனக்கு துணை முதல்–மந்திரி பதவி வேண்டும் என்று கேட்டார். ஆனால் அவருக்கு மந்திரி பதவிகூட கிடைக்கவில்லை.

இதனால் எம்.பி.பட்டீல் உள்பட மந்திரி பதவி கிடைக்காத சுமார் 20 எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். நேற்று முன்தினம் எச்.கே.பட்டீல் மற்றும் எம்.பி.பட்டீல் ஆகியோரின் வீடுகளில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக கூடி ஆலோசனை நடத்தினர். கட்சி தங்களை நடத்திய விதம் சரியல்ல என்று அவர்கள் கூறினர். இது காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பாக கூட்டணி ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதிருப்தியில் உள்ளவர்களை சரிசெய்ய காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக களம் இறங்கியுள்ளது.

பொறுமையாக இருங்கள்

இந்த நிலையில் நேற்று எச்.கே.பட்டீலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், “மந்திரிசபை விரிவாக்கத்தின்போது உங்களுக்கு பதவி கிடைக்கும். அதுவரை பொறுமையாக இருங்கள். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்’’ என்று கூறியதாக தெரிகிறது. பதிலுக்கு பேசிய எச்.கே.பட்டீல், “மந்திரி பதவி கிடைக்கவில்லை என்பதற்காக எனக்கு அதிருப்தி இல்லை. கட்சியில் நடைபெறும் நிகழ்வுகள் சரியானதாக இல்லை. கட்சியை வளர்த்த எங்களை மேலிடம் நடத்திய விதம் சரியல்ல. இனி எனக்கு மந்திரி பதவி கொடுத்தாலும் ஏற்பேன் என்று உறுதியாக சொல்ல முடியாது’’ என்று கூறினார்.

மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சதீஸ் ஜார்கிகோளியை பெங்களூருவில் அவருடைய வீட்டில் நேற்று அக்கட்சியின் மாநில செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் சந்தித்து பேசினார். அப்போது அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் தினேஷ் குண்டுராவ் இறங்கினார்.

3 ஆண்டுகள் பதவியில் இருக்க முடியும்

அப்போது பேசிய தினேஷ் குண்டுராவ், “இப்போது மந்திரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் 2 ஆண்டுகளுக்கு அந்த பதவியில் இருப்பார்கள். அடுத்து நீங்கள் உள்பட புதிய மந்திரிகள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் 3 ஆண்டுகள் அந்த பதவியில் இருக்க முடியும். அதனால் கருத்து வேறுபாட்டை கைவிட்டு கட்சிக்கு ஒத்துழைப்பு தாருங்கள்“ என்று கேட்டுக் கொண்டார். இதற்கு சதீஸ் ஜார்கிகோளி எதுவும் சொல்லவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் எம்.பி.பட்டீலை பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில், முதல்–மந்திரி குமாரசாமி நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்புக்கு பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த குமாரசாமி, “காங்கிரஸ் கட்சியில் நடக்கும் நிகழ்வுக்கும், எனக்கும் சம்பந்தம் கிடையாது. அவர்களின் உட்கட்சி பிரச்சினையில் நான் தலையிட முடியாது. ஆயினும் கூட்டணி ஆட்சியின் முதல்–மந்திரி என்ற முறையில் இந்த அரசை சுமூகமாக நடத்த வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. அதன் அடிப்படையில் எம்.பி.பட்டீலை நேரில் சந்தித்து பேசினேன். அவர் என்னிடம் சில விவரங்களை கூறி தனது வேதனையை வெளிப்படுத்தினார். துணை முதல்–மந்திரி பதவி வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார். அவருடைய பிரச்சினையை என்னால் தீர்க்க முடியாது. ஆயினும் இதுபற்றி காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு தெரிவிப்பேன். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கூறி சமரசம் செய்தேன். எல்லா பிரச்சினைகளும் சுமூகமாக தீரும் என்று நான் நம்புகிறேன்’’ என்றார்.

அதிருப்தி குறித்து விவாதித்தனர்

இதுபற்றி கருத்து தெரிவித்த எம்.பி.பட்டீல், “குமாரசாமி எங்கள் கட்சியை சேர்ந்தவர் கிடையாது. அவர் என்னை சந்திக்க விரும்புவதாக கூறினார். அதனால் அவர் என்னை சந்தித்து பேசினார்’’ என்றார். எம்.பி.பட்டீலை சந்தித்த பிறகு குமாரசாமி கிருஷ்ணா இல்லத்திற்கு திரும்பினார். அங்கு அவரை அவரது அண்ணனும், மந்திரியுமான எச்.டி.ரேவண்ணா சந்தித்தார். அவர்கள் இருவரும் காங்கிரசில் எழுந்துள்ள அதிருப்தி குறித்து விவாதித்தனர்.

அதைத்தொடர்ந்து தினேஷ் குண்டுராவை அவருடைய அலுவலகத்தில் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா, எம்.எல்.ஏ.க்கள் சதீஸ் ஜார்கிகோளி, ஆனந்த்சிங் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அப்போது சதீஸ் ஜார்கிகோளி தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. மந்திரிசபையில் இன்னும் 6 இடங்கள் உள்ளதாகவும், அதனால் அனைவரும் பொறுமையாக இருக்கும்படியும் தினேஷ் குண்டுராவ் கூறினார். ஆயினும் சதீஸ் ஜார்கிகோளி அதை ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. காங்கிரசில் மந்திரி பதவி கிடைக்காததால் போர்க்கொடி தூக்கியுள்ள எம்.எல்.ஏ.க்களால் கூட்டணி ஆட்சி ஆட்டம் கண்டு வருகிறது.

--–

(பாக்ஸ்) துணை முதல்–மந்திரி பதவி வேண்டும்

எம்.பி.பட்டீலை பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் துணை முதல்–மந்திரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான பரமேஸ்வர் சந்தித்து பேசினார். அப்போது மந்திரிசபை விரிவாக்கத்தின்போது மந்திரி பதவி வழங்குவதாகவும், அதுவரை பொறுமையாக இருக்கும்படியும் கூறினார். இதை ஏற்க மறுத்த எம்.பி.பட்டீல், ‘‘முதல் சுற்றிலேயே மந்திரி பதவியை கொடுத்திருந்தால் நான் ஏற்று இருப்பேன். இது எனது சுயமரியாதை வி‌ஷயம். இப்போது மந்திரி பதவியை ஏற்க நான் தயாராக இல்லை. தென்கர்நாடகத்திற்கு துணை முதல்–மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபால் வட கர்நாடகத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் எனக்கு துணை முதல்–மந்திரி பதவி வழங்க வேண்டும்’’ என்றார். இதற்கு எந்த பதிலும் பேசாமல் பரமேஸ்வர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.

எம்.பி.பட்டீலுக்கு 20 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு

மந்திரி பதவி கிடைக்காததால் எம்.பி.பட்டீல் கடும் அதிருப்தியில் உள்ளார். அவருடைய வீட்டில் 2–வது நாளாக நேற்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் எம்.டி.பி.நாகராஜ், சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அடுத்ததாக என்ன செய்யலாம், எந்த மாதிரியான முடிவை எடுக்கலாம் என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். துணை முதல்–மந்திரி பதவி கோரிக்கையை கட்சி மேலிடத்திடம் முன்வைப்பது குறித்தும் அவர்கள் விவாதித்தனர். எம்.பி.பட்டீல் இப்போது அதிருப்தியாளர்களின் தலைவராக மாறியுள்ளார். மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் சுமார் 20 பேர் அவருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கேட் திறப்பதில் மோதல்: அ.தி.மு.க. எம்.பி.–ரெயில்வே ஊழியர்கள் சமரசம்
கொடைரோடு அருகே கேட் திறப்பதில் திண்டுக்கல் அ.தி.மு.க. எம்.பி., ரெயில்வே ஊழியர் மோதிக்கொண்ட நிலையில், நேற்று மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் 2 பேரும் சமரசம் பேசினர்.
2. தரைக்குடி கண்மாயில் கருவேல மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்
சாயல்குடி அருகே உள்ள தரைக்குடி கண்மாயில் கருவேல மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் சமரசத்தை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.