காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி: அரசியல் நிகழ்வுகளை பா.ஜனதா உன்னிப்பாக கவனித்து வருகிறது


காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி: அரசியல் நிகழ்வுகளை பா.ஜனதா உன்னிப்பாக கவனித்து வருகிறது
x
தினத்தந்தி 8 Jun 2018 10:00 PM GMT (Updated: 8 Jun 2018 9:50 PM GMT)

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் அரசியல் நிகழ்வுகளை பா.ஜனதா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

பெங்களூரு, 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் அரசியல் நிகழ்வுகளை பா.ஜனதா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

போர்க்கொடி தூக்கியுள்ளனர்

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. மந்திரிசபை விரிவாக்கம் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. இதில் புதிதாக 25 மந்திரிகள் பதவி ஏற்றனர். காங்கிரசில் எச்.கே.பட்டீல், எம்.பி.பட்டீல் போன்ற மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் காங்கிரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது, கூட்டணி ஆட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக சட்டசபையில் பா.ஜனதாவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங்கிரசுக்கு 78 எம்.எல்.ஏ.க்களும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 37 எம்.எல்.ஏ.க்களும் இருக்கிறார்கள். சுயேச்சைகள் 2 பேர் உள்ளனர். 3 இடங்கள் காலியாக உள்ளன. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மைக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

உன்னிப்பாக கவனிக்கிறது

கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) மற்றும் சுயேச்சைகளின் பலம் 117 ஆக உள்ளது. இதில் 5 பேர் பதவியை ராஜினாமா செய்தால் இந்த கூட்டணி தனது பெரும்பான்மையை இழந்துவிடும். அதே நேரத்தில் பா.ஜனதாவின் பெரும்பான்மைக்கு இன்னும் 9 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மூன்று கட்சிகளிலுமே, ஒவ்வொரு எம்.எல்.ஏ.வின் ஆதரவும் மிக முக்கிய பங்கு ஆற்றுகிறது.

அதனால் கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ள பா.ஜனதா மாநிலத்தில் நிலவும் அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் இறங்கலாமா? என்பது குறித்து பா.ஜனதா தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

Next Story