ஏர்வாடி அருகே விடிய விடிய பலத்த மழை; குளங்கள் நிரம்பின மலையில் சிக்கி தவித்த பக்தர்கள் மீட்பு


ஏர்வாடி அருகே விடிய விடிய பலத்த மழை; குளங்கள் நிரம்பின மலையில் சிக்கி தவித்த பக்தர்கள் மீட்பு
x
தினத்தந்தி 10 Jun 2018 3:00 AM IST (Updated: 10 Jun 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

ஏர்வாடி அருகே பலத்த விடிய விடிய பெய்த பலத்த மழையில் குளங்கள் நிரம்பின. மலையில் சிக்கி தவித்த பக்தர்களை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்.

ஏர்வாடி, 

ஏர்வாடி அருகே பலத்த விடிய விடிய பெய்த பலத்த மழையில் குளங்கள் நிரம்பின. மலையில் சிக்கி தவித்த பக்தர்களை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்.

விடிய விடிய பலத்த மழை 

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி, மாவடி, ராஜாபுதூர், மலையடிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பலத்த மழை பெய்தது. விடிய விடிய பெய்த பலத்த மழையால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து பகலிலும் இடைவிடாமல் மழை பெய்தது.

இதனால் அங்குள்ள நம்பி மலை அடிவாரத்தில் உள்ள தாமரை குளம் நிரம்பி, மறுகால் பாய்ந்தது. அந்த தண்ணீரானது செங்குளாகுறிச்சி குளம், தோழான்குளம், புல்லியூர்குறிச்சி குளம், வடுகச்சிமதில் குளம், திருவரங்கநேரி குளம் ஆகியவற்றுக்கு சென்றது. இதேபோன்று திருக்குறுங்குடி பெரிய குளமும் முக்கால்வாசி அளவுக்கு நிரம்பியது. பலத்த மழையால் நம்பியாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மலையில் சிக்கி தவித்த பக்தர்கள் 

திருக்குறுங்குடி நம்பி மலை அடிவாரத்தில் உள்ள நம்பி கோவிலுக்கு, தமிழ் மாதத்தின் முதல் மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் திரளான பக்தர்கள் சென்று வழிபடுவது வழக்கம். நேற்று வைகாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு, சுமார் 200–க்கு மேற்பட்ட பக்தர்கள் நம்பி கோவிலுக்கு சென்றனர். நம்பி கோவிலுக்கு செல்லும் வழியில் நம்பியாற்றின் குறுக்கே தரைமட்ட தாம்போதி பாலம் உள்ளது. அந்த பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் சென்றது.

இதனால் நம்பி கோவிலுக்கு சென்ற பக்தர்கள், திரும்பி வர முடியாமல் மலையில் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், வள்ளியூர், நாங்குனேரி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தரைமட்ட பாலத்தின் குறுக்கே கயிறு கட்டி, பக்தர்களை மீட்டனர்.

மலையில் தங்கிய பக்தர்கள் 

எனினும் 25 பக்தர்கள் மற்றும் 5 பூசாரிகள் கோவிலில் மலையில் இருந்து இறங்க மறுத்து விட்டனர். அவர்கள், நம்பி கோவிலில் இரவில் கருடசேவை நடத்த வேண்டும் என்றும், காலையில் மலை அடிவாரத்தில் உள்ள சங்கிலி பூதத்தார் கோவிலில் கிடாவெட்டு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது எப்படி?

திருக்குறுங்குடி அருகே செங்குளாகுறிச்சி கால்வாயில் கடந்த மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த கால்வாயை சீரமைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் விடிய விடிய பலத்த மழையில் தாமரைகுளம் நிரம்பி மறுகால் பாய்ந்தது. அந்த தண்ணீரானது செங்குளாகுறிச்சி கால்வாய் உடைப்பு வழியாக நம்பியாற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

Next Story