கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை: மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு


கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை: மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 10 Jun 2018 5:00 AM IST (Updated: 10 Jun 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானல்,

தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை பலத்த காற்றுடன் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக சுற்றுலா இடமான பசுமைப்பள்ளத்தாக்கு அருகே பெரியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பின்னரே போக்குவரத்து சீரானது.

நேற்று அதிகாலையில் வீசிய பலத்த காற்று காரணமாக மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர் மற்றும் பூண்டி பகுதிகளுக்கு செல்லும் வழியில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் அப்பகுதிகளிலும் போக்குவரத்து தடைபட்டது.

இதையடுத்து நெடுஞ்சாலை உதவி பொறியாளர் செந்தில்குமார் தலைமையில் ஊழியர்கள் விரைந்து சென்று மரங்களை அகற்றினர். அதுமட்டுமின்றி நகரில் உள்ள ஏரிச்சாலை உள்பட பல்வேறு இடங்களிலும் மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தன. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளிலும், மேல்மலை கிராமங்களிலும் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story