டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்து பொதுமக்கள் நூதன போராட்டம்: 2-வது முறையாக கடை முன் விநாயகர் சிலையை வைத்து பூஜை
வந்தவாசியில் டாஸ்மாக் கடைதிறக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் நேற்று 2-வது முறையாக கடை முன் விநாயகர் சிலையை வைத்து பூஜை நடத்தினர்.
வந்தவாசி,
வந்தவாசி நகரில் காந்தி ரோட்டில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ள பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வந்தது. இதனால் அந்த பகுதியில் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பல்வேறு கட்சியினரும், அமைப்புகளை சேர்ந்தவர்களும் சாலைமறியல், முற்றுகை போராட்டம் நடத்தினர். கோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த கடை மற்றும் 2 இடங்களில் இருந்த கடைகளும் மூடப்பட்டன.
இந்தநிலையில் காந்தி ரோட்டில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க உள்ளதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கடந்த 6-ந்தேதி டாஸ்மாக் கடையின் முன்பு விநாயகர் சிலை வைத்து பூஜை செய்தனர்.
இதை அறிந்த கட்டிடத்தின் உரிமையாளர் விரைந்து சென்று விநாயகர் சிலையை அங்கிருந்து அகற்றி சிறிது தூரத்தில் வைத்தார். இதன் காரணமாக ஆவேசமான அப்பகுதி பொதுமக்கள் விநாயகர் சிலையுடன் டாஸ்மாக் கடையின் முன்பு சாலைமறியல் செய்தனர்.
இதனை அறிந்த போலீசார் விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களின் கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர், இதனால் சாலைமறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் டாஸ்மாக் கடை திறக்க உள்ளதாக மீண்டும் கிடைத்த தகவலை தொடர்ந்து பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் கடையின் முன்பு விநாயகர் சிலை வைத்து பூஜைகள் செய்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பொற்செழியன் தலைமைல் போலீசார் விரைந்து சென்று போராட்டம் செய்தவர்களிடம் கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி சமரசம் செய்தனர். இதனை ஏற்று போராட்டம் செய்தவர்கள் விநாயகர் சிலையை எடுத்துச்சென்றனர்.
Related Tags :
Next Story