மாவட்ட செய்திகள்

காட்பாடி அருகே சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து: 8 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி நின்றன + "||" + Cargo train collision accident near Katpadi

காட்பாடி அருகே சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து: 8 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி நின்றன

காட்பாடி அருகே சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து: 8 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி நின்றன
காட்பாடியை அடுத்த சேவூர் ரெயில்நிலையம் அருகே சரக்கு ரெயில் திடீரென தடம்புரண்டு 8 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி நின்றன. இந்த விபத்து காரணமாக ரெயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
சிப்காட் (ராணிப்பேட்டை), 

சென்னை-பெங்களூரு- கோவை இடையே அமைக்கப்பட்ட இரட்டை ரெயில்பாதை காட்பாடி வழியாக செல்கிறது. இந்த வழியாக 24 மணி நேரமும் நூற்றுக்கணக்கான ரெயில்கள் இருபுறமும் அதிவேகத்தில் சென்று வருகின்றன. நேற்று அதிகாலை சென்னையிலிருந்து கர்நாடகா மாநிலம் ஒய்ட்பீல்டு என்ற இடத்திற்கு கன்டெய்னர்களுடன் கூடிய சரக்கு ரெயில் வேலூர் மாவட்டம் காட்பாடியை நோக்கி வந்து கொண்டிருந்தது.

ரெயிலில் 40 சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. அந்த ரெயில் திருவலத்தை அடுத்த சேவூர் ரெயில் நிலையத்தினை கடந்து சுமார் ½ கிலோமீட்டர் தூரம் செல்வதற்குள் திடீரென தடம்புரண்டது. இதனை அறிந்த என்ஜின் டிரைவர் சரக்கு ரெயிலை அதே இடத்தில் நிறுத்தினார். பின்னர் வந்து பார்த்தபோது சரக்கு ரெயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி ஜல்லிக்கற்களின் மீது நின்றன. அந்த பெட்டிகள் அனைத்தும் ஒருபுறம் சிறிது சாய்ந்த நிலையில் நின்றது.

இது குறித்து அருகில் உள்ள சேவூர் ரெயில் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. உடனே சேவூர் ரெயில் நிலைய அதிகாரிகள் அருகிலுள்ள காட்பாடி, வாலாஜா ரோடு, அரக்கோணம் ரெயில் நிலையங்களுக்கும், சென்னையில் உள்ள மண்டல அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த பாதையில் இருபுறமும் வந்த ரெயில்கள் ஆங்காங்கே உள்ள ரெயில் நிலையங்களில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து கோட்ட ரெயில்வே மேலாளர் நவீன்குலாட்டி தலைமையிலான ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்தனர். மேலும் சென்னை, காட்பாடி மற்றும் அரக்கோணத்திலிருந்து சுமார் 100-க்கும் அதிகமான மீட்பு பணியாளர்கள், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவு பொறியாளர்கள், அதிகாரிகள் மீட்பு ரெயில்களில் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் உடைந்த தண்டவாளங்களை சரி செய்யும் பணியிலும், தடம்புரண்ட பெட்டிகளை தூக்கி நிறுத்தி அதனை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியிலும் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

சரக்கு ரெயில் சென்ற தண்டவாளம் உடைபட்டு அதனால் ரெயில் பெட்டிகள் தடம்புரண்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்த விபத்து குறித்து உடனடியாக காட்பாடி, வாலாஜாரோடு, அரக்கோணம் ரெயில் நிலையங்களுக்கு தெரிவிக்கப்பட்டதால் பெங்களூருவில் இருந்து காட்பாடி வழியாக வரும் ரெயில்களும், சென்னையிலிருந்து காட்பாடி வழியாக பெங்களூரு உள்பட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ரெயில்களும் ஆங்காங்கு சிறிது நேரம் நிறுத்தப்பட்டிருந்தன. பின்னர் மற்றொரு தண்டவாளம் வழியாக ஒவ்வொரு ரெயிலாக விடப்பட்டன. இந்த ரெயில் விபத்தினால் அனைத்து ரெயில்களும் சிறிது காலதாமதமாக சென்றன.

இந்த விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இன்று (நேற்று) இரவிற்குள் ரெயில் பாதை சரி செய்யப்படும் எனவும், நாளை (இன்று) முதல் இந்த பாதையில் ரெயில்போக்குவரத்து சீராகிவிடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.