என்னுடன் இருப்பவர்கள் பதவிக்காக இல்லை மு.க.அழகிரி பேச்சு
என்னுடன் இருப்பவர்கள் பதவிக்காக இல்லை என்று மு.க.அழகிரி கூறினார்.
மதுரை,
மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் மகள் பிரீத்தி–சுவாதித்தன் திருமணம், விரகனூரில் உள்ள வேலம்மாள் கல்யாண மகாலில் நேற்று நடந்தது. முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தனர்.
விழாவில் மு.க.அழகிரி பேசியதாவது:–
மன்னன், இந்த திருமணத்தை ஒரு மாநாடு போல் நடத்தி காட்டி இருக்கிறார். நல்ல வேளையாக என் வேட்டியை உருவிவிடாமல் இருந்தார்கள். அந்த அளவுக்கு மாநாடு போல் மக்கள் கூட்டம் உள்ளது. அனைத்து இடைத்தேர்தல்களிலும் மன்னனின் உழைப்பு மகத்தானது. மன்னன் உள்பட என்னுடன் இருப்பவர்கள் அனைவரும் பதவிக்காக இல்லை. ஆனால் அங்கே இருப்பவர்கள் அப்படி இல்லை. அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. அப்போது அங்கே (தி.மு.க.) எத்தனை பேர் இருப்பார்கள்?. எத்தனை பேர் போவார்கள்? என்பது தெரியவரும்.
அடுத்த ஆண்டு தான் பேசலாம் என்று இருந்தேன். ஆனால் நண்பர்களின் வற்புறுத்தலால் இங்கு பேச வேண்டியதாகி விட்டது. அதிக படங்களில் நடித்து நடிகை மனோரமா சினிமாவில் கின்னஸ் சாதனை படைத்தார். அதே போல் அதிக பாடல்களை பாடிய சுசிலாவும் கின்னஸ் சாதனை படைத்தார். அதே போல் அதிகமாக செல்போனில் பேசுபவர் என்ற கின்னஸ் சாதனையை மன்னனுக்கு தரலாம். என்னுடன் அவர் இருக்கும் போது அதிக அளவில் போன் அழைப்புகள் வரும். அதில் இருந்தே அவருக்கு அதிக நண்பர்கள் இருப்பதை தெரிந்து கொண்டேன்.
இவ்வாறு அழகிரி பேசினார்.