தாராபுரத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 ஊராட்சி செயலாளர்கள் பணியிடை நீக்கம்


தாராபுரத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 ஊராட்சி செயலாளர்கள் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 10 Jun 2018 10:30 PM GMT (Updated: 10 Jun 2018 8:07 PM GMT)

தாராபுரத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 ஊராட்சி செயலாளர்களை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

குண்டடம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நஞ்சியம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி மாவட்ட நிர்வாகம் அந்த குளத்தை தூர்வாருவதற்காக 100 நாள் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 96 ஆயிரம் நிதியை ஒதுக்கியது. அந்த குளம் தூர்வாரப்படவில்லை.

ஆனால் குளத்தை தூர்வாரியதாகவும், இதற்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் செலவு செய்யப்பட்டதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் தணிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டது. இதன்மூலம் குளத்தை தூர்வாரியதாக பொய் கணக்கு காண்பிக்கப்பட்டதாக பொதுமக்களுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியை சந்தித்து தூர்வாரிய குளத்தை காணவில்லை என்றும், தங்கள் கிராமத்தில் குளம் எதுவும் வெட்டப்படாத நிலையில் அரசிடம் இருந்து குளம் வெட்ட நிதி பெற்று முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உடனடியாக இது தொடர்பாக விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அதிகாரி சுப்பிரமணி, செயற்பொறியாளர் ஜெயந்தி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது குளத்தை தூர்வாராமல் அதற்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் செலவு செய்ததாக பொய் கணக்கு காண்பிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்த விசாரணை அறிக்கை கலெக்டரிடம் வழங்கப்பட்டது. இதன்படி குளத்தை தூர்வாராமல் பொய் கணக்கு காண்பித்ததாக நஞ்சியம்பாளையம் ஊராட்சி செயலாளர் நாகராஜை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து நஞ்சியம்பாளையம் ஊராட்சி செயலாளராக, பொம்மநல்லூர் ஊராட்சி செயலாளர் பெரியசாமி நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுபோல, தாராபுரம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வயல்வெளிகளை வீட்டுமனை பட்டாவாக மாற்றி அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அங்கு தற்போது 40–க்கு மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இதுகுறித்து கலெக்டரிடம் அந்த பகுதியில் உள்ளவர்கள் புகார் கொடுத்தனர். இந்த புகார் குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி ராகவேந்திரன் விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். அவருடைய விசாரணையின் பேரில் வீட்டுமனைக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து கவுண்டச்சிபுதூர் ஊராட்சி செயலாளர் நாச்சிமுத்துவை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி 2 ஊராட்சி செயலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தாராபுரத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் மேலும் இதுபோல பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.


Next Story