இகத்புரியில் ஹவுரா ரெயில் தடம்புரண்டு விபத்து பயணிகள் உயிர் தப்பினர்
இகத்புரியில் ஹவுரா ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்.
மும்பை,
இகத்புரியில் ஹவுரா ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்.
ரெயில் தடம் புரண்டது
மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு மேற்கு வங்க மாநிலம் ஹவுரா நோக்கி நீண்டதூர ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் நேற்று அதிகாலை 2.05 மணியளவில் நாசிக் மாவட்டம் இகத்புரி ரெயில் நிலையத்தை நெருங்கி கொண்டிருந்த போது, திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
அந்த ரெயிலின் எஸ்-12, எஸ்-13 மற்றும் பேண்டிரி கார் ஆகிய 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி கீழே இறங்கின.
அப்போது பயணிகள் அனைவரும் அயர்ந்த தூக்கத்தில் இருந்தனர். தடம் புரண்டதன் காரணமாக ரெயில் பெட்டிகள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பயணிகள் திடுக்கிட்டு எழுந்தனர். சம்பவத்தின் போது, ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது.
பயணிகள் உயிர் தப்பினர்
இதன் காரணமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினார்கள். உடனடியாக அந்த ரெயில் நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். தடம்புரண்ட ரெயில் பெட்டிகளை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணிகள் நடந்தன.
இந்த விபத்தின் காரணமாக நீண்டதூர ரெயில் சேவைகள் அந்த வழித்தடத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த வழியாக வந்த 8 வடமாநில ரெயில்கள் புனே- மன்மாடு வழியாக திருப்பி விடப்பட்டன. மேலும் சில ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இந்தநிலையில், தடம்புரண்ட ரெயில் காலையில் தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story