விக்கிரவாண்டி-கும்பகோணம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி: அவகாசம் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
விக்கிரவாண்டி- கும்பகோணம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக வீடு, நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளை காலி செய்ய காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் வாணியம்பாளையம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
விழுப்புரம்
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். வாணியம்பாளையம் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
விக்கிரவாண்டி முதல் கும்பகோணம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. இந்த பணிக்காக சாலையோரமாக இருந்த எங்களது நிலம், வீடுகள், கடைகள் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் வீடு மற்றும் கடைகளை அகற்ற போதிய காலஅவகாசம் வழங்கவில்லை.
இதற்கிடையில் அரசு அதிகாரிகள் திடீரென எங்களது கிராமத்துக்கு வந்து 2 நாட்களில் வீடு, கடைகளை காலிசெய்யுமாறு கூறுகிறார்கள். எங்களது நிலத்தை கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டு தொகை பலருக்கு வரவில்லை. மேலும் கையகப்படுத்தியுள்ள நிலம், வீடு, கடைகளுக்கான மதிப்பீடை அதிகாரிகள் சரியாக மதிப்பிடவில்லை. எனவே மறு மதிப்பீடு செய்ய வேண்டும். அரசு கொடுக்கும் இழப்பீட்டு தொகையை வைத்து மாற்று இடத்தில் குடியேற முடியவில்லை. அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனை இல்லாததாலும், மணல் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற காரணத்தால் அரசு கொடுத்த இழப்பீட்டுத்தொகையை வைத்து புதிய வீடு கட்ட முடியவில்லை. எனவே வீடுகளை காலி செய்ய காலஅவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் சுப்பிரமணியன், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
உளுந்துார் பேட்டை அருகே உள்ள என்.பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்கள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
என்.பில்ராம்பட்டு கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். யாரேனும் இறந்தால் அவர்களை புதைப்பதற்கோ எரிப்பதற்கோ சுடுகாடு தனியாக இருக்கிறது. ஆனால் அங்கு செல்ல பாதை வசதி இல்லை. பட்டா நிலம் வழியாக பிணத்தை எடுத்து செல்கிறோம். சுடுகாட்டையும் பக்கத்து நிலத்துக்காரர் ஆக்கிரமித்து வருகிறார். ஆக்கிரமிப்பை தடுக்கவும், சுடுகாடு செல்ல வழியும், சுடுகாட்டில் தகன கொட்டகையும், காரிய கொட்டகையும் அமைத்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story