பழுது நீக்கும் பணியின்போது “ஜாக்கி” கருவி நழுவியது: பஸ்சுக்கு அடியில் சிக்கி தொழிலாளர்கள் படுகாயம்


பழுது நீக்கும் பணியின்போது “ஜாக்கி” கருவி நழுவியது: பஸ்சுக்கு அடியில் சிக்கி தொழிலாளர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 12 Jun 2018 11:00 PM GMT (Updated: 12 Jun 2018 8:40 PM GMT)

கும்பகோணம் போக்குவரத்துக்கழக பணிமனையில் பழுது நீக்கும் பணியின்போது “ஜாக்கி” கருவி நழுவியதால் போக்குவரத்து தொழிலாளர்கள் 5 பேர் பஸ்சுக்கு அடியில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கும்பகோணம்,

அரசு போக்குவரத்துக்கழகம் கும்பகோணம் கோட்டத்தில் நாகை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், கும்பகோணம் ஆகிய 6 போக்குவரத்து மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்கள் மூலமாக 3,500 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் கும்பகோணம், நாகை மண்டலங்களில் மட்டும் 1,500 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கும்பகோணம் போக்குவரத்து கோட்டத்தின் தலைமை அலுவலகம் கும்பகோணத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் பின்புறம் பணிமனை உள்ளது. இங்கு பஸ்களை பழுது நீக்குதல், பழைய பஸ்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிமனையில் நேற்று மானாங்கோரையை சேர்ந்த பாண்டியன் (வயது23), திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த அருண்குமார் (21), கும்பகோணம் அழகப்பன் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (42), திருவிடைமருதூரை சேர்ந்த செந்தில்குமார் (42), கும்பகோணத்தை சேர்ந்த கோபி (23) ஆகிய 5 தொழிலாளர்கள் ஒரு பஸ்சை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பஸ்சை தூக்கி நிறுத்த உதவும் “ஜாக்கி” என்ற கருவி மூலம் இவர்கள் பஸ்சை தூக்கி நிறுத்தி பஸ்சுக்கு கீழே படுத்தவாறு வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஜாக்கி கருவி நழுவியதால், பஸ் கீழே விழுந்தது. இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் 5 பேரும் பஸ்சுக்கு அடியில் சிக்கி கொண்டனர். அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மற்ற தொழிலாளர்கள் ஓடி வந்து, பஸ்சுக்கு அடியில் சிக்கிய 5 பேரையும் மீட்டனர்.

படுகாயத்துடன் இருந்த அவர்கள் உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில் அருண்குமார் என்பவரின் கால்கள் முறிந்ததால் அவர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கும்பகோணம் போக்குவரத்துக்கழக பணிமனையில் நடந்த விபத்தில் சிக்கி 5 பேர் படுகாயம் அடைந்தது குறித்த தகவல் அறிந்த போக்குவரத்து தொழிலாளர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு (2017) கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட நாகை மண்டலத்தில் உள்ள பொறையாறு போக்குவரத்துக்கழக பணிமனை ஓய்வறை கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 11 பேர் உடல் நசுங்கி பலியான நிலையில் தற்போது நடந்துள்ள இந்த சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தொழிலாளர்களுக்கு பணியின்போது உரிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தரமான தளவாட பொருட்களை வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். 

Next Story