மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் பணிகளை திருப்பதி தேவஸ்தான குழுவினர் ஆய்வு + "||" + The Kanyakumari Venkatajapalapathy temple work is inspected by the Tirupathi Devasthanam group

கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் பணிகளை திருப்பதி தேவஸ்தான குழுவினர் ஆய்வு

கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் பணிகளை திருப்பதி தேவஸ்தான குழுவினர் ஆய்வு
கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் பணிகளை திருப்பதி தேவஸ்தான குழுவினர் ஆய்வு செய்தனர்.
கன்னியாகுமரி,

திருமலை, திருப்பதி தேவஸ்தானம் சார்பில், கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரையில் 5½ ஏக்கர் நிலத்தில் வெங்கடாஜலபதி கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டு, 2013-ம் ஆண்டு பூமி பூஜையுடன் பணி தொடங்கி நடந்து வருகிறது.

தற்போது இங்குள்ள மேல்தளத்தில் ஏழுமலையான் வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருட பகவான் சன்னதி ஆகிய சன்னதிகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. சன்னதியில் வைப்பதற்கான திருப்பதி ஏழுமலையான், பத்மாவதி தாயார், ஆண்டாள், கருடபகவான் சிலைகள்் திருப்பதி தேவஸ்தான சிற்ப கல்லூரியில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான சென்னை உள்ளூர் தகவல் ஆலோசனை மைய உறுப்பினர்கள் ரவிபாபு, மோகன்ராவ், செல்லவதி, ராமராவ், சந்திரசேகர், ராஜேந்திரன், ரெங்காரெட்டி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி வந்தனர். அவர்களுடன், திருப்பதி தேவஸ்தான உதவி பொறியாளர் அமர்நாத்ரெட்டி, திட்ட பொறியாளர் அஜ்ஜார் ராவ் ஆகியோர் அடங்கிய திருப்பதி தேவஸ்தான குழுவினர் நேற்று காலை வெங்கடாஜலபதி கோவில் பணிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது விவேகானந்த கேந்திர செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்த ராவ், குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, போலீஸ் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயகர், ஒப்பந்ததாரர் திருச்சி ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். அவர்கள் கோவிலின் மேல்தளத்துக்கு சென்று வரைபடம் மூலம் கோவில் கட்டுமான பணிகளை பார்வையிட்டனர்.

அதன்பிறகு திருப்பதி தேவஸ்தான சென்னை உள்ளூர் தகவல் ஆலோசனை மைய உறுப்பினர் மோகன்ராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருமலை, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.24 கோடி செலவில் இங்கு வெங்கடாஜலபதி கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. ஏழுமலையான் மூலஸ்தானம், பத்மாவதி தாயார், ஆண்டாள் மற்றும் கருடபகவான் சன்னதிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பான ஆய்வு பணிக்காகவே நாங்கள் வந்து உள்ளோம். இந்த பணிகளுக்கு விவேகானந்த கேந்திரம் ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. அடுத்த (ஜூலை) மாதம் 11-ந் தேதிக்குள் கும்பாபிஷேகம் நடத்தலாமா? என்பது பற்றி முடிவு செய்ய, நாங்கள் அறிக்கையை திருப்பதியில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரியிடம் சமர்ப்பிக்க உள்ளோம். அதன் பிறகு முடிவு செய்யப்படும்.

கும்பாபிஷேக விழாவுக்கு தமிழக, ஆந்திர முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய, மாநில மந்திரிகளை அழைக்க உள்ளோம்.

இங்கு கொடிமரம் 46 அடி உயரத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான மரம் தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. நாளை (அதாவது இன்று) திருப்பதி கோவில் தலைமை அர்ச்சகர் சேஷாத்ரி, ஆகம ஆலோசகர், அர்ச்சகர்கள் மற்றும்் ஸ்தபதி ஆகியோர் இங்கு வந்து பார்வையிடுகிறார்கள். கும்பாபிஷேகத்தன்று திருப்பதியில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரெயில் விட ரெயில்வே நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.