நாங்குநேரி அருகே டாஸ்மாக் ஊழியர்களிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி ரூ.1¾ லட்சம் வழிப்பறி 2 பேருக்கு வலைவீச்சு
நாங்குநேரி அருகே டாஸ்மாக் ஊழியர்களிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி, ரூ.1¾ லட்சம் வழிப்பறி செய்த 2 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்
நாங்குநேரி,
நாங்குநேரி அருகே டாஸ்மாக் ஊழியர்களிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி, ரூ.1¾ லட்சம் வழிப்பறி செய்த 2 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
டாஸ்மாக் ஊழியர்கள்நெல்லை மாவட்டம் நாங்குநேரி– திசையன்விளை ரோட்டில் தட்டாங்குளம் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் சுரண்டையைச் சேர்ந்த சுரேஷ் (வயது 50) மேற்பார்வையாளராகவும், பரப்பாடி அருகே தாமரைகுளத்தைச் சேர்ந்த பாண்டியன் (42) விற்பனையாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நாங்குநேரியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து, டாஸ்மாக் கடையில் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவில் வேலை முடிந்ததும், வழக்கம்போல் டாஸ்மாக் கடையை சுரேஷ், பாண்டியன் ஆகிய 2 பேரும் பூட்டி விட்டு, ஒரு மோட்டார் சைக்கிளில் நாங்குநேரிக்கு புறப்பட்டனர். அப்போது கடையில் வசூலான ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை மறுநாள் காலையில் வங்கியில் செலுத்துவதற்காக சுரேஷ் எடுத்து சென்றார். பாண்டியன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.
அரிவாளைக் காட்டி வழிப்பறிதட்டாங்குளம் விலக்கு அருகில் சென்றபோது, அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று சாலையின் குறுக்கே மோட்டார் சைக்கிளை நிறுத்தி வழிமறித்து, அரிவாளைக் காட்டி சுரேஷ், பாண்டியனை மிரட்டினர். பின்னர் சுரேஷிடம் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை மர்மநபர்கள் பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், நாங்குநேரி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொம்மைசாமி வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் ஊழியர்களிடம் வழிப்பறி செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.