திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் 3–வது நாளாக ஆர்ப்பாட்டம்
ஜாக்டோ–ஜியோ அமைப்பின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை 3–வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்,
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜாக்டோ–ஜியோ அமைப்பின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை 3–வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஜாக்டோ–ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசினார்.
ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தரமூர்த்தி, பாஸ்கரன் மற்றும் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுமதி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஞானசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், சென்னையில் கைது செய்யப்பட்ட ஜாக்டோ–ஜியோ மாநில நிர்வாகிகளை விடுவிக்க கோரியும் கோஷமிட்டனர்.