தமிழக அரசின் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் ஊழல்: கோவை வனத்துறை அதிகாரிகள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு


தமிழக அரசின் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் ஊழல்: கோவை வனத்துறை அதிகாரிகள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 13 Jun 2018 11:00 PM GMT (Updated: 13 Jun 2018 7:53 PM GMT)

தமிழக அரசின் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் ரூ.10¾ லட்சம் ஊழல் செய்ததாக கோவை வனத்துறை அதிகாரிகள் உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை,

தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி மரக்கன்று நடும் திட்டம் 2012–ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு மொத்தம் 64 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மரக்கன்று நடும் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இதில் மதுரையில் போலி ரசீதுகள் தயாரித்து பல லட்சம் ரூபாய் மோசடி நடந்திருந்தது தெரியவந்தது. இதே போல கோவையிலும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறியதாவது:–

நாமக்கல் மாவட்ட வனத்துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்த சேகர் (வயது 55) என்பவர் கடந்த 2014–ம் ஆண்டு கோவை வனத்துறையில் உதவி அலுவலராக கூடுதல் பொறுப்பை கவனித்து வந்தார். மேலும் பணியில் இருந்து ஓய்வு பெற்ற வனச்சரக அதிகாரி முருகேசன் (63) என்பவருக்கு இந்த மரக்கன்று நடும் திட்டத்துக்காக மீண்டும் பணி வழங்கி உள்ளனர். அவருக்கு மீண்டும் பணி வழங்கியது யார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவர்கள் 2 பேரும் வனத்துறை ஒப்பந்ததாரர் கணேசன் (59) உதவியுடன் போலி ரசீதுகள் தயாரித்துள்ளனர்.

2014–ம் ஆண்டு கோவை வன மண்டலத்துக்குட்பட்ட தொண்டாமுத்தூர், அன்னூர், சின்னதடாகம், மருதூர், கார்யாம்பாளையம், தாராபுரம், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், பேரூர். சிறுமுகை, பிச்சனூர் உள்பட பல்வேறு கிராமங்களில் தேக்கு, வேம்பு உள்பட பல்வேறு மரக்கன்றுகள் நட ரூ.33 லட்சத்து 66 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியை கொண்டு ஒரு லட்சத்து 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டது.

ஆனால் மரக்கன்றுகளை அவை வளர்க்கப்பட்ட இடத்தில் இருந்து வாடகை வண்டியில் எடுத்துச் சென்று விவசாயிகளின் இடங்களில் குழி தோண்டி மரக்கன்றுகளை நட்டதாக 12 போலி ரசீதுகளை 3 பேரும் சேர்ந்து தயாரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் மொத்தம் ரூ.10.77 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக இவர்கள் 3 பேர் மீதும் மோசடி, போலி ஆவணங்களை தயாரித்தல், நம்பிக்கை மோசடி, ஏமாற்றும் நோக்கத்துடன் போலி கணக்கு தயாரித்தல் மற்றும் ஊழல் தடுப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story