மாவட்ட செய்திகள்

குற்றாலத்தில் தங்கும் விடுதிகள் சீரமைக்கப்படும் மாவட்ட கலெக்டர் ஷில்பா பேட்டி + "||" + Accommodation in the hotel will be renovated District collector Shilpa interview

குற்றாலத்தில் தங்கும் விடுதிகள் சீரமைக்கப்படும் மாவட்ட கலெக்டர் ஷில்பா பேட்டி

குற்றாலத்தில் தங்கும் விடுதிகள் சீரமைக்கப்படும்
மாவட்ட கலெக்டர் ஷில்பா பேட்டி
குற்றாலத்தில் தங்கும் விடுதிகள் சீரமைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறினார்.

தென்காசி,

குற்றாலத்தில் தங்கும் விடுதிகள் சீரமைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறினார்.

குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி உள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா நேற்று காலை குற்றாலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

காலையில் பழைய குற்றாலம் அருவி, புலியருவி, ஐந்தருவி, மெயின் அருவி ஆகிய அருவிகளுக்கு சென்று பார்வையிட்டார். அப்போது சுற்றுலா பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். குடிநீர் வசதி, உடை மாற்றும் அறை, கழிவறைகள் போன்றவை குறித்து ஆய்வு செய்தார்.

வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கான கட்டண வசூல் நடைபெறும் டோல்கேட் பகுதியில் முறையாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? இது குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளனவா? என்று விசாரணை நடத்தினார். அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதன் பிறகு குற்றாலம் நகர பஞ்சாயத்து மன்ற கூடத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், தென்காசி உதவி கலெக்டர் சவுந்தர ராஜ், தாசில்தார் சங்கர், போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார், மாவட்ட வன அலுவலர் திருமால், நகர பஞ்சாயத்துகளின் மாவட்ட உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் அற்புதம், உதவி இயக்குனர் முத்துமாலை, மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், படகு குழாம் அலுவலர் அசோகன், நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகள் கனகராஜ், லிங்க ராஜ், வேளாண்மை துறை இணை இயக்குனர் செந்தில் குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அருள்பதி, உதவி அலுவலர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மூலம் சாரல் விழாவை நடத்துவது, தென்னக கலை பண்பாட்டு மையம் மூலம் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது, சீசன் முடியும் வரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல் துறை மூலம் செய்வது, பெண்களை கேலி செய்வது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடுவது, மது அருந்தி குளிக்க செல்பவர்களை தடை செய்வது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் சுற்றுலா தகவல் மையம் அமைப்பது, பல்வேறு வகையான போட்டிகள் நடத்தி சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பது, சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த முறையில் பஸ் வசதிகள் செய்து கொடுப்பது, அவசர சிகிச்சைக்காக மருத்துவக் குழு அமைப்பது, குடி போதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, அருவி பகுதிகளில் எண்ணெய், ஷாம்பு, சோப்பு, சீயக்காய் போன்றவற்றை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, போதிய மின் விளக்கு வசதி அமைப்பது உட்பட பல்வேறு வசதிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

விவாதிக்கப்பட்ட வி‌ஷயங்களில் தேவையானவற்றை செய்ய மாவட்ட கலெக்டர் ஷில்பா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்திற்கு பிறகு மாவட்ட கலெக்டர் ஷில்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :

தற்போது சீசன் மிகவும் நன்றாக உள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. கடந்த ஆண்டு போல் ஜூலை மாதம் சாரல் விழா சிறப்பாக நடத்தப்படும். இன்று சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டேன். மின் வசதி இல்லாத இடங்களில் அதனை ஏற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாகனங்கள் நிறுத்தும் இடங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படாமல் இருக்க கட்டண விவரங்களை போர்டுகளில் அந்தந்த இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த போர்டுகளில் தொலைபேசி மற்றும் செல்போன் எண்கள் எழுதப்பட்டு இருக்கும். அதிக கட்டணம் வசூலித்தால் அந்த எண்களுக்கு சுற்றுலா பயணிகள் தொடர்பு கொள்ளலாம்.

அனைத்து துறை அதிகாரிகளுக்கும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தேவையானவற்றை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சி.சி.டி.வி கேமரா பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்படும். மதுரை உயர்நீதி மன்றம் கூறிய 33 உத்தரவுகளையும் முறைப்படி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழைய குற்றாலம் பகுதியில் இரண்டரை ஏக்கர் இடம் வாகனங்கள் நிறுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நகர பஞ்சாயத்திற்கு சொந்தமான தங்கும் விடுதிகள் பராமரிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் சிறந்த முறையில் தங்கி செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் அருவிகளில் குளிக்க பிரத்யேகமாக ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.