ஏரி, குளங்களின் மதகுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் கலெக்டர் உத்தரவு


ஏரி, குளங்களின் மதகுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 15 Jun 2018 4:30 AM IST (Updated: 15 Jun 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

ஏரி, குளங்களின் மதகுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவிட்டு உள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கி்ல் தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, பேசும்போது கூறியதாவது:-

இயற்கை இடர்பாடுகள் தொடர்பான நிகழ்வுகளை கலெக்டர் அலுவலகத்திற்கு நேரிடையாக கட்டணம் ஏதுமின்றி இலவசமாக தெரிவிக்கும் தொலைபேசி எண் 1077 குறித்து அனைத்து ஊராட்சி அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகிய இடங்களில் உரிய விளம்பரங்களை செய்திட வேண்டும். உதவி கலெக்டர்கள் மற்றும் தாசில்தார்கள் தங்களது அலுவலகங்களில் சுழற்சி முறையில் அலுவலர்களை பணியமர்த்தி, மழை வெள்ளத்தால் ஏற்படும் உயிர்சேதம், பொருட்சேதம் மற்றும் கால்நடை சேதம் குறித்து பெறப்படும் தகவல்களை உடனுக்குடன் அறிக்கை அனுப்ப வேண்டும்.

குறிப்பாக காவிரி ஆற்றங்கரைகளை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும்போது, மீட்பு நடவடிக்கைகளையும் மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து மழைமானிகளையும் தணிக்கை செய்து, அவைகள் நல்ல முறையில் உள்ளது என்பதற்கான அறிக்கையினை அனைத்து தாசில்தார்களும் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது பகுதிகளில் உள்ள பரிசல் வைத்திருப்போரின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் விவரங்களை தயார் செய்து வைத்து கொள்ள வேண்டும். தற்காலிக நிவாரண முகாம்களை முழுமையாக தணிக்கை செய்து தயார் நிலையில் உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

ஏரிகள் மற்றும் குளங்களின் மதகுகளில் அடைப்புகள் இருந்தால் அவற்றினை சரி செய்திடவும், வலுக்குறைந்த கரைகளை வலுப்படுத்தவும், மதகுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி்டவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழை, வெள்ளக் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்படும் இடங்களில் தேவையான மின்வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, பாதை வசதி மற்றும் கழிப்பிட வசதி ஆகியவை உள்ளனவா? என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தி்ல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, வருவாய் அலுவலர் பழனிச்சாமி, நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், மாவட்ட வன அலுவலர் காஞ்சனா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மாலதி, மகளிர் திட்ட இயக்குனர் மணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story