பூதப்பாண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி


பூதப்பாண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி
x
தினத்தந்தி 15 Jun 2018 4:15 AM IST (Updated: 15 Jun 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

பூதப்பாண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.

பூதப்பாண்டி,

பூதப்பாண்டி அருகே ரத்தினபுரம் திடல் பகுதியை சேர்ந்தவர் மரியராஜ். இவருடைய மனைவி பாக்கிய ஜெயந்தி (வயது 42). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

மரியராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், பாக்கிய ஜெயந்தி குழந்தைகளுடன் திடல் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாக்கிய ஜெயந்தி ஆரல்வாய்மொழியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் நேற்று மாலை வீடு திரும்புவதற்காக தனது கணவரின் தம்பி தேவ அருளுடன் மோட்டார் சைக்கிளில் திடல் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார். கடுக்கரை விலக்கு பகுதியில் வந்த போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாக்கிய ஜெயந்தி மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாக்கிய ஜெயந்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நேற்று காலையில் பாக்கிய ஜெயந்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story