தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் ரோந்து நேரில் பார்த்ததால் அதிர்ச்சி


தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் ரோந்து நேரில் பார்த்ததால் அதிர்ச்சி
x
தினத்தந்தி 17 Jun 2018 3:15 AM IST (Updated: 17 Jun 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் நேரில் பார்த்ததால் அதிர்ச்சி அடைந்தார்கள்.

தாளவாடி,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட மரியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பாபு. இவரது வீட்டையொட்டி தோட்டம் உள்ளது. கடந்த 14–ந் தேதி வனப்பகுதியில் இருந்து சிறுத்தை பாபுவின் தோட்டத்துக்குள் புகுந்தது. இதை பார்த்த தோட்டத்தில் காவலுக்கு நின்றிருந்த அவரது நாய் குரைத்துக்கொண்டே விவசாய நிலத்தில் ஓடியது.

நாயை பார்த்த சிறுத்தை அதை கடித்து குதறிக்கொண்டு தூக்கிக்கொண்டு ஓடியது. இதேபோல் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஊருக்குள் புகுந்த சிறுத்தை மகேஷ் என்பவரது 2 கன்றுக்குட்டிகளையும், பழனிச்சாமியின் நாயையும் தூக்கி சென்றது. சிறுத்தையின் அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தாளவாடி வனத்துறையினர் மரியாபுரம் கிராமத்துக்கு நேற்று முன்தினம் இரவு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது பாபு, மகேஷ், பழனிச்சாமி ஆகியோரது தோட்டங்களில் பல இடங்களில் சிறுத்தையின் கால்தடங்கள் பதிவானதை பார்த்தார்கள்.

மேலும் பாபு தோட்ட பகுதியில் உள்ள ஓடை அருகே சென்றபோது புதர் மறைவில் இருந்து ஏதோ சத்தம் வந்தது. அதனால் அங்கு டார்ச் லைட் அடித்து பார்த்தபோது உள்ளே இருந்து ஒரு சிறுத்தை உறுமியபடி வெளியே வந்தது. இதனால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே பட்டாசு வெடித்தனர். சத்தம் கேட்டு சிறுத்தை அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இதன் மூலம் மரியாபுரம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறையினர் விடிய, விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘மரியாபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் விவசாய நிலங்களில் பணி செய்யவே அச்சமாக உள்ளது. பட்டாசு வெடித்தால் சிறுத்தை இந்த பகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது. எனவே வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா வைத்து அதன் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்’ என்றனர்.


Next Story