மயான வாழ்க்கை மகத்துவமானது


மயான வாழ்க்கை மகத்துவமானது
x
தினத்தந்தி 17 Jun 2018 2:52 PM IST (Updated: 17 Jun 2018 2:52 PM IST)
t-max-icont-min-icon

சுடுகாடு என்றாலே பெண்களை ஒருவித பயம் கவ்விக்கொள்கிறது. அதனால் பெரும்பாலும் பெண்கள் அதன் பக்கம் எட்டிப்பார்ப்பதே இல்லை.

சுடுகாடு என்றாலே பெண்களை ஒருவித பயம் கவ்விக்கொள்கிறது. அதனால் பெரும்பாலும் பெண்கள் அதன் பக்கம் எட்டிப்பார்ப்பதே இல்லை. ஆனால் இந்த முருகேஸ்வரி அதற்கெல்லாம் விதிவிலக்கு. நள்ளிரவிலும் பிணங்களை எரிக்கிறார். உற்றார், உறவினர் அத்தனைபேரும் விட்டுவிட்டு கடந்துபோகும் உயிரற்ற உடல் அருகில் கடைசி வரை இருந்து ஆகவேண்டிய அத்தனை கடமைகளையும் செய்கிறார். அது மனநிறைவைத் தருகிற மகிழ்ச்சியான பணி என்றும் சொல்கிறார்.

முருகேஸ்வரி, தேனி மாவட்டம், போடி நகராட்சி மயானத்தில் எரிவாயு தகன மேடையில் பிணம் எரிக்கும் தொழிலாளி. மயானத்தில் முருகேஸ்வரி இருக்கிறார் என்றால், அன்றைக்கு பணிகள் தொய்வின்றி விறுவிறுப்பாக நடக்கும். பிணத்துக்கு இறுதிச் சடங்கு செய்வது முதல், எரியூட்டி சாம்பலை சேகரித்து கொடுப்பது வரையிலான அத்தனை வேலைகளையும் சிரத்தையோடு செய்து முடிக்கிறார்.

மயானத்தில் அவரை சந்தித்தபோது தனது வாழ்க்கையை விவரித்தார்:

‘‘எனக்கு சொந்த ஊர் மதுரை ஆனையூர். நான் ஏழ்மையான சலவைத் தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்தவள். 5-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனது கணவர் பெயர் கருப்பையா. எங்களுக்கு பால்பாண்டி, வீரபத்திரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். சொந்த வீடு இல்லாததால் போடி மயானம் அருகில் கொட்டக்குடி ஆற்றங்கரையோரம் சிறு குடிசை அமைத்து வசித்தோம். ஊருக்குள் சென்று அழுக்கு துணிகளை வாங்கி வந்து சலவை செய்தோம். வீட்டிற்கு வீடு வாஷிங் மெஷின் வந்து விட்ட பிறகு சலவைக்கு யாரும் துணிகொடுப்பதில்லை. அதனால் சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் சூழ்நிலை உருவானது. குழந்தைகளை வளர்க்க ரொம்ப கஷ்டப்பட்டோம்.

என் கணவருக்கு சலவைத் தொழிலை தவிர வேறு எதுவும் தெரியாது. வாழ வழியின்றி தவித்த நிலையில், மயானத்தில் பிணம் புதைப்பதற்கு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு உதவியாக எனது கணவரும் வேலைக்கு போனார். அந்த வருமானத்தில் வாழ்க்கையை நகர்த்தினோம்.

2012-ம் ஆண்டு இந்த மயானத்தில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டது. அதில் எனது கணவருக்கு வேலை கொடுத்தார்கள். மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம் கிடைத்தது. குறைவான சம்பளத்தில் குடும்பம் நடத்துவது கஷ்டமாக இருந்தது. நானும் கணவரோடு மயான வேலைக்கு போகலாம் என்று நினைத்து, என் கணவரிடம் கூறினேன். பிணம் எரிக்கும் வேலைக்கு பெண்ணாகிய என்னை அழைத்துச் செல்வதற்கு அவர் தயங்கினார். ஆனாலும் வறுமை என்னை இங்கு வரவழைத்துவிட்டது.

முதலில் கணவருக்கு உதவியாக இருந்தேன். ஒருசில மாதங்களில் பிணத்தை தனி ஆளாக எரிக்க பழகி விட்டேன். எனக்கு மாதம் ரூ.4 ஆயிரம் சம்பளம் கிடைக்கிறது. நானும், கணவரும் சேர்ந்து சம்பாதிக்கும் பணத்தில் குடும்பம் ஓடுகிறது.

முதலில் வசித்த ஆற்றங்கரை குடிசையில் இருந்து வந்துவிட்டதால், வீடு இல்லாத நிலை உருவானது. சில மாதங்கள் மயானத்தில் தான் தங்கி இருந்தோம். இங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு வாழ்ந்தோம். மயானத்தில் ஒருபக்கம் பிணம் எரிந்துகொண்டிருக்கும். மற்றொரு புறம் அடுப்பில் எங்களுக்கான உணவு வெந்து கொண்டிருக்கும். நாங்கள் படும் கஷ்டத்தை பார்த்து, நகராட்சி அதிகாரிகள் எங்களுக்கு மயானம் அருகில் பயன்பாடு இன்றி இருந்த ஒரு கட்டிடத்தில் தங்கிக் கொள்ள அனுமதி கொடுத்தனர். சில ஆண்டுகளாக அந்த கட்டிடத்தில் வசித்து வருகிறோம். முன்பு அந்த இடம் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் இடமாக பயன்பட்டுவந்தது..’’ என்றார், முருகேஸ்வரி.

மயான வாழ்க்கை முதலில் இவருக்கு பயத்தை ஏற்படுத்தத்தான் செய்திருக்கிறது. பல நாட்கள் நடுராத்திரியில் விழித்திருந்து அழுதிருக்கிறார்.

‘‘மயான வாழ்க்கை எனக்கு முதலில் பயத்தை தந்தது. அப்போது பல இரவுகள் தூக்கம் இன்றி தவித்தேன். நடுராத்திரியில் சிறு சத்தம் கேட்டால்கூட துடித்து எழுந்து மிரண்டுபோவேன். மயான வேலைக்கு வந்த பிறகும் சில காலம் அந்த பயம் நீடித்தது. சில நாட்களில் மாலை நேரத்தில் 2 அல்லது 3 பிணங்கள் வந்துவிடும். அவைகளை எரித்து முடிப்பதற்கு நள்ளிரவாகிவிடும். பின்னர் தூங்கச் சென்றால் கொடூரமான கனவுகள் வந்து தூக்கத்தை கெடுக்கும். நாட்கள் செல்லச் செல்ல மனம் இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு விட்டது. இயற்கை மரணம் அடைந்தவர்கள், நீரில் மூழ்கி இறந்தவர்கள், விபத்தில் சிக்கி பலியானவர்கள், தற்கொலை செய்தவர்கள், தீயில் கருகியவர்கள், நோய் வாய்ப்பட்டு இறந்தவர்கள் என பலரின் பிணமும் இங்கு வரும். குழந்தைகள், வாலிப பிள்ளைகள் பிணம் வரும்போது பார்க்கவே மனசுக்கு கஷ்டமாக இருக்கும். ஆரம்ப காலத்தில் அழுது இருக்கிறேன்.

இந்த பணிக்கு வருவதற்கு முன்பு பேய், பிசாசு என்ற பயம் இருந்தது. இப்போது அப்படி எதுவும் கிடையாது. பேய், பிசாசு என்று எதுவும் கிடையாது. சுடுகாட்டு பக்கம் போனால் பேய் அடிக்கும் என்று யார் யாரோ சொன்ன கதைகளை கேட்டு நானும் பயந்தேன். இப்போது உண்மை தெரிந்ததும் அந்த பயம் எல்லாம் நீங்கி விட்டது. மயான வாழ்க்கை பழகிவிட்டது. இதுவரை 1,800-க்கும் மேற்பட்ட பிணங்களை எரித்துள்ளேன்.

இந்த வேலை எனக்கு அதிக மனநிறைவைத் தருகிறது. செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். அதுபோல், மனிதர்கள் இறந்த பின்பு தெய்வம் ஆகிவிடுவார்கள் என்றும் சொல்வார்கள். அப்படிப்பட்ட மனித உடல்களை தொட்டு இறுதி காரியம் செய்து, தகனம் செய்யும் தொழில் என்பது மற்ற தொழில்களை விட மேன்மையானது.

இறந்தவர்களின் உறவினர்கள் சிலர் வீட்டோடு நின்று விடுவார்கள். சிலர் மயானம் வரை வருகிறார்கள். நாங்கள்தான் கடைசி வரை உடனிருக்கிறோம். இறந்தவர்களின் கடைசி உறவினராக பக்கத்தில் இருந்து உடலை தகனம் செய்துவிட்டு, கொஞ்சம் சாம்பலையும், சில எலும்புத்துண்டுகளையும் சேகரித்து உறவினர்களிடம் கொடுத்து அனுப்புகிறேன். குடும்ப கஷ்டத்தில் இந்த வேலைக்கு வந்தேன். இப்போது மனம் விரும்பி செய்கிறேன்’’ என்றார்.

இவருக்கு குடியிருக்க சொந்த வீடு இல்லை. அத்துடன், ரேஷன் கார்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ‘‘ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும்போது மயானம் அருகில் வசிப்பதாக முகவரி கொடுத்ததால் கார்டு கொடுக்க அதிகாரிகள் தயங்கினர். பின்னர் நேரில் வந்து அதிகாரிகள் பார்வையிட்டு, ரேஷன் கார்டு வழங்கினர். கடந்த ஆண்டுவரை அந்த ரேஷன் கார்டை பயன்படுத்தி வந்தோம். பின்பு ஆதார் கார்டுக்கு நான், எனது கணவர், மூத்த மகன் ஆகிய 3 பேரும் போட்டோ எடுத்தோம். இளையமகனுக்கு பள்ளிக்கூடத்திலேயே ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுத்து கார்டும் கொடுத்து விட்டார்கள். எங்களுக்கு இதுவரை ஆதார் கார்டு வரவில்லை. ஆதார் எண் இணைக்காததால் ரேஷன் கார்டும் ரத்தாகி விட்டது. இப்போது ரேஷன் அரிசி கூட வாங்க முடியாமல், கடையில் அரிசி வாங்கி சமைக்கிறோம்’’ என்றார்.

கஷ்டத்தோடு வாழ்ந்தாலும் செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்கும் முருகேஸ்வரி பாராட்டுக்குரியவர்தான்.

Next Story