ரெயில் நிலையம் அமைக்காததை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


ரெயில் நிலையம் அமைக்காததை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Jun 2018 10:15 PM GMT (Updated: 18 Jun 2018 6:52 PM GMT)

வேதாரண்யம் அருகே குரவப்புலத்தில் ரெயில் நிலையம் அமைக்காததை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து கோடியக்கரைக்கு 1936-ம் ஆண்டு முதல் மீட்டர் கேஜ் பாதையில் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. அப்போது திருத்துறைப்பூண்டி, ஆதிரெங்கம், மேலமருதூர், கரியாப்பட்டினம், குரவப்புலம், தோப்புத்துறை, வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி, கோடியக்கரை ஆகிய ஊர்களில் ரெயில் நிலையங்கள் இயங்கி வந்தன.குரவப்புலத்திற்கும், தோப்புத்துறைக்கும் இடையே மக்கள் நலன் கருதி நெய்விளக்கு என்றகிராமத்தில் தற்காலிக ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு இயங்கிவந்தது.

தற்போது அகல ரெயில் பாதையாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. ஆங்காங்கே பாலங்கள் கட்டும் பணி முடிவடைந்து ரெயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் திருத்துறைப்பூண்டி, கரியாப்பட்டினம், நெய்விளக்கு, தோப்புத்துறை, வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி ஆகிய இடங்களில் ரெயில் நிலையம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் குரவப்புலத்தில் ரெயில் நிலையம் அமைக்கவில்லை. இதை கண்டித்து குரவப்புலம், கத்தரிப்புலம், நாகக் குடையான், அவரிக்காடு, செட்டிப்புலம், செம்போடை, தேத்தாகுடி, தென்னம்புலம் உள்ளிட்ட கிராமமக்கள், போராட்டக்குழு தலைவர் ராஜப்பன் தலைமையில் குரவப்புலம் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் குரவப்புலம் மிராசுதார் ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன், குரவப்புலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணமுத்து, பா.ம.க.வை சேர்ந்த அசோகன், ம.தி.மு.க.வை சேர்ந்த ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிவேலு, பா.ஜ.க.வை சேர்ந்த சோழன், விவசாயசங்க தலைவர் ராஜன், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் மாசி உள்பட பலர் கலந்து கொண்டு குரவப்புலத்தில் ரெயில் நிலையம் அமைக்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும், குரவப்புலத்தில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

Next Story