மனைவியுடனான தகராறில் 2 வயது மகளை தரையில் தூக்கி அடித்த தொழிலாளி


மனைவியுடனான தகராறில் 2 வயது மகளை தரையில் தூக்கி அடித்த தொழிலாளி
x
தினத்தந்தி 19 Jun 2018 4:30 AM IST (Updated: 19 Jun 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே மனைவியுடனான தகராறில் 2 வயது மகளை தரையில் தூக்கி அடித்து வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வேங்கைபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 28). விவசாய தொழிலாளி. இவருடைய மனைவி அமுதா. இவர்களுக்கு 2 வயதில் அவந்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. வேல்முருகன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த அவர், மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது மனைவி மீது இருந்த ஆத்திரத்தில் அருகே இருந்த தனது மகள் அவந்திகாவை தலைகீழாக தூக்கிய வேல்முருகன் தரையில் அடித்தார். இதனால் அந்த குழந்தையின் தலையில் உள்காயம் ஏற்பட்டு வீக்கம் ஏற்பட்டது.

வலியால் அந்த குழந்தை அலறி துடித்தது. தாய் அமுதாவும் கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்து குழந்தையை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வேல்முருகன் வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை வலைவீசி தேடிவருகின்றனர்.

மனைவியுடனான தகராறில், தொழிலாளி ஒருவர் தனது 2 வயது மகளை தரையில் தூக்கி அடித்த சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story