தேனீக்கள் கொட்டிக் கொடுக்கும் பணம்!


தேனீக்கள் கொட்டிக் கொடுக்கும் பணம்!
x
தினத்தந்தி 24 Jun 2018 10:19 AM GMT (Updated: 24 Jun 2018 10:21 AM GMT)

தேனீக்களின் கடும் உழைப்பினால்தான் நமக்கு தித்திக்கும் தேன் கிடைக்கிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தேனை விரும்புவார்கள். இதனால் தேனின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தேன் உற்பத்தி அதிகமாக நடைபெறும் பகுதிகளில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்று. இங்கு தேனீ வளர்க்கும் விவசாயி ஹென்றி, சிறந்த தேனீ வளர்ப்பாளர் விருது பெற்றுள்ளார். குலசேகரம் அருகே மலவிளையை அடுத்த கொட்டூர் பகுதியைச் சேர்ந்தவர். அவரிடம் தேனீ வளர்ப்பு பற்றி சிறிது உரையாடுவோம்...

விருது பெற்றது குறித்து?

எனக்கு தேசிய தேனீ வாரியம் மூலம் சிறந்த தேனீ வளர்ப்பாளர் விருது கிடைத்ததை நினைக்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது குடும்பம் பாரம்பரியமிக்க விவசாய குடும்பம். அன்னாசி பழ சாகுபடியில் எங்கள் குடும்பம் பல ஆண்டு காலமாக ஈடுபட்டு வருகிறது. 2 ஏக்கரில் அன்னாசி சாகுபடி செய்துள்ளேன். இருந்தாலும் 20 வயதில் இருந்தே நான் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தேனீ வளர்க்கிறேன். இதை நான் கிளைத் தொழிலாக செய்ய தொடங்கினேன். அதன்மீது ஏற்பட்ட ஈடுபாட்டால் தற்போது முழுநேர தொழிலாக இதைச் செய்து வருகிறேன். எனவே அன்னாசிப் பழ சாகுபடி தற்போது கிளைத் தொழிலாக மாறிவிட்டது.

தேனீக்கள் கொட்டுமா?

தேனீக்களைப் பொறுத்தவரையில் அவற்றை சரியான முறையில் கையாண்டால் அவை நமது கட்டுப்பாட்டில் இருக்கும். தேனீக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்போதுதான் அவை நம்மை கொட்டுகின்றன. எனவே தேன் பெட்டிகளில் உள்ள தேன் அடைகளை எடுக்கும் போதும் சரி, வைக்கும்போதும் சரி தேனீக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் லாவகமாக கையாள வேண்டும். நானும் தேனீக்களிடம் கொட்டுப்பட்டு இருக்கிறேன். பல்லாயிரம் தேனீக்கள் என்னை கொட்டியிருக்கின்றன. இதனாலேயே எனது நெற்றி வடுக்களாக காட்சி தருகின்றன. தேனீக்கள் சுதந்திரமாக செயல்படக் கூடியவை. எனவே தேனீக்களின் உற்ற தோழனாக விவசாயிகள் இருக்க வேண்டும். நான் தேனீக் களுடன் கடந்த 50 ஆண்டுகளாக நட்புடன் பழகி வருகிறேன்.

அதிக தேன் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

தேன் உற்பத்தி அதிகமாக கிடைக்க வேண்டுமானால் தேனீக்களுடன் நட்பாக பழக வேண்டும். மேலும் ஒரு பெட்டியில் ராணித் தேனீ, ஆண் தேனீக்கள் போக 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் தேனீக்கள் இருக்க வேண்டும். சீசன் காலம் போக மீதம் உள்ள காலங்களில் தேனீக்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். அதற்கு தேவையான உணவாக சீனிப்பாகு (சர்க்கரை) அளிக்க வேண்டும்.

குறிப்பிட்ட காலத்தில்தான் தேன் உற்பத்தி நடக்குமா?

குமரி மாவட்டத்தில் சீசன், மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை 3 மாதங்களாக கணக்கிடப்பட்டுள்ளன. கேரளாவில் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை 5 மாத காலங்கள் தேன் சேகரிப்பு காலமாகும். எனவே குமரி மாவட்ட விவசாயிகள், இங்கு சீசன் முடிந்ததும், கேரள மாநிலத்துக்கு தேன் பெட்டிகளை எடுத்துச் சென்று அங்குள்ள ரப்பர் மர தோட்டங்களில் வைத்து தேன் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சிலர் கர் நாடகா, கோவா போன்ற மாநிலங் களுக்கும் தேன் பெட்டிகளை எடுத்துச் சென்று தேன் உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். நான் கேரளாவில் 500 தேன் பெட்டிகள் வைத்துள்ளேன். மழை இருந்தால் தேன் உற்பத்தி இருக்காது. வெயில் காலங்களில்தான் தேன் அதிகமாக கிடைக்கும்.

தேன் மூலம் கிடைக்கும் வருவாய்?

உற்பத்தி செய்யும் தேனை மார்த்தாண்டத்தில் உள்ள கூட்டுறவு தேன் கொள்முதல் மற்றும் சுத்தி கரிப்பு நிலையத்தில் வாங்கிக் கொள்கிறார்கள். ஒரு கிலோ தேன் ரூ.130-க்கு கொள்முதல் செய் கிறார்கள். தேன்கூடுகளில் இருந்து மெழுகு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மெழுகு தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனையாகிறது.

ஒரு பெட்டியில் எவ்வளவு தேன் கிடைக்கும்?

சாதாரணமாக ஒரு தேன் பெட்டியில் இருந்து ஆண்டுக்கு அதிகபட்சமாக 25 கிலோ தேன் வரை பெறலாம்.

தேன் உற்பத்திக்கு சிறந்த எதிர்காலம் உள்ளதா?

அரசு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தேன் கொள்முதல் செய்வது இல்லை. அதிகமாக கையிருப்பு இருப்பதாக கூறிவிடுகிறார்கள். தனியார் மொத்த வியாபாரிகள் குறைந்த விலைக்கு தேனை வாங்குகிறார்கள். இதனால் கடன் வாங்கி இந்த விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் நஷ்டமடைகிறார்கள். இதனால் தேன் உற்பத்தியை குறைத்துக் கொண்ட விவசாயிகள் பலர். அரசு தேனை அதிகமாக கொள்முதல் செய்ய வேண்டும், கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் நமது தேனை அரசு சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேன் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்போர் நலவாரியம் அமைக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் தேனீ ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். தேனுக்கு தேவை நிறைய இருப்பதால் இந்த மாற்றங்களைச் செய்தால் அதிக தேன் உற்பத்தியால் நாட்டின் வருவாயை பெருக்க முடியும். 

பெண் இனத்தின் ராஜ்ஜியம்

தேனீக்கள் உலகில் பெண் இனத்துக்கு மட்டுமே முன்னுரிமை தரப்படுகிறது. தேனீக்களின் வாழ்க்கை மிகவும் கட்டுக்கோப்பானது. ஒவ்வொரு கூட்டிலும் ராணித் தேனீ, வேலைக்கார தேனீ, ஆண் தேனீ என 3 வகையான தேனீக்கள் வாழ்கின்றன.

ஒரு கூட்டில் ஒரு ராணித் தேனீ மட்டுமே இருக்கும். வேலைக்கார தேனீக்கள், ஆண் தேனீக்கள் அனைத்தும் ராணி தேனீக்கு கட்டுப்பட்டுத்தான் நடக்கும்.

வேலைக்கார தேனீயின் இனப்பெருக்க உறுப்பு களின் வளர்ச்சியை ராணித் தேனீ அவை வளரும் பருவத்திலேயே தடை செய்கிறது. வாய்வழி உணவு பரிமாற்றம் செய்யும்போது கடத்தப்படும் இருவகை திரவப் பொருட்கள் மற்ற தேனீக் களின் இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சியை தடுத்து விடுகிறது. மேலும் இந்த சுரப்புதான் ராணித் தேனீயின் மீது வேலைக்கார தேனீக் களுக்கு ஈர்ப்பு ஏற்படவும், அதனைச்சுற்றி ஒரு கூட்டம் அமையவும் உதவுகிறது.

ராணித் தேனீ அதிக காலம் உயிர்வாழும். இவை மற்ற தேனீக்களைப்போல மகரந்தங்களை சாப்பிடுவதில்லை. தேனீக்களால் சுரக்கப்படும் ஒரு வகையான திரவத்தை உட்கொள்ளும். அந்த திரவத்தில் புரதம், கொழுப்பு, வைட்ட மின்கள், தாதுப்பொருட்கள் உள்ளிட்டவை நிறைந்துள்ளன. இதனால்தான் ராணித் தேனீ மட்டும் இளமையாகவும், அதிக வாழ்நாளை கொண்டதாகவும் விளங்குகின்றன. ஆண் தேனீக்களின் ஆயுட்காலம் 110 முதல் 120 நாட்கள் மட்டுமே. வேலைக்கார தேனீக்களின் ஆயுட்காலமும் 3 மாதங்கள் மட்டுமே. ஆனால் ராணி தேனீ 3 முதல் 5 ஆண்டுகள் உயிர் வாழும்.

ராணித்தேனீயை அடைய ஆண் தேனீக்களிடம் கடும் போட்டி நிலவும். ராணித்தேனீ வெகு உயரத்தில் பறக்கும். தனது உயரத்துக்கு இணையாக பறக்கும் ஆண் தேனீயுடன் மட்டுமே ராணித்தேனீ இணையும் என்கிறார்கள். கஷ்டப்பட்டு ராணி தேனியுடன் இணையும் ஆண் தேனீ உறவு முடிந்ததும் இறந்துவிடும்.

Next Story