சென்னையில் பரவி வரும் ‘5–ந்தேதி மார்க்கெட்’ கலாசாரம்


சென்னையில் பரவி வரும் ‘5–ந்தேதி மார்க்கெட்’ கலாசாரம்
x
தினத்தந்தி 6 July 2018 12:15 AM GMT (Updated: 5 July 2018 8:26 PM GMT)

சென்னையில் ‘5–ந்தேதி மார்க்கெட்’ என்ற புது கலாசாரம் பரவி வருகிறது. பொருட்களை குடும்ப தலைவிகள் போட்டிபோட்டு வாங்கிச் செல்கின்றனர்.

சென்னை,

மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு பொருட்களை ஒரே இடத்தில் வாங்குவதற்கு வசதியாக முந்தைய காலங்களில் சந்தைகள் தோற்றுவிக்கப்பட்டன. கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திலோ, பல கிராம மக்கள் வாங்கும் வகையில் ஒரு பொதுவான இடத்திலோ சந்தைகள் அமைக்கப்பட்டன. அங்கு பல்வேறு வகையான மக்கள் பயன்பாட்டுக்கான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

ஒரு பொருளை கொடுத்து இன்னொரு பொருளை வாங்கும் பண்டமாற்று முறையும் இருந்தது. இதில் பரிணாம வளர்ச்சி பெற்று கடைகள் வந்தன. வீதிக்கு, வீதி திரும்பும் திசை எல்லாம் தற்போது கடைகள் இருக்கின்றன. 

எந்திரமயமான வாழ்க்கையில் பக்கத்து வீட்டுக்காரர் கூட யார்? என்று தெரியாத அளவுக்கு காலையிலிருந்து இரவு வரை வேலைப்பளு சிலந்தி வலை போன்று நம்மோடு பின்னி பிணைந்துவிட்டது. இதனால் கடைக்கு சென்று வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்களை வாங்க கூட நேரமில்லாதவர்கள் இணையதளத்திலேயே பதிவு செய்து பொருட்களை வாங்கிக் கொள்கிறார்கள்.

சென்னையில் சில அடுக்குமாடி குடியிருப்புகளில் கூடையை கயிற்றில் கட்டி தொங்கவிட்டிருப்பதை பார்க்கமுடியும். பால், மளிகை பொருட்களை கடைக்காரர்கள் அதில் போட்டுவிட்டு செல்வார்கள். மாதத்திற்கு ஒரு முறை கடைகாரர்களுக்கு பணம் கணக்கிட்டு குடியிருப்புவாசிகள் வழங்குவார்கள். மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து பொருட்களை வாங்குவதற்கு சிரமப்பட்டு, கிணற்றில் இருந்து வாளியில் தண்ணீர் இறைப்பதை போல கூடையில் வியாபாரிகள் போட்டுச்செல்லும் பொருட் களை எடுப்பதை பார்க்க முடிகிறது.

சந்தைகளை தேடிச்சென்று பொருட்கள் வாங்கிய காலம் மாறி, வீட்டின் வாசலுக்கே பொருட்கள் வந்து விற்பனை செய்யும் காலம் தற்போது வந்துவிட்டது. நேரமின்மை, பணிப்பளு, சோர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தான் தேடி செல்வதை விடவும், தன்னை தேடி பொருட்கள் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகரித்து விட்டனர். பழங்கள், காய்கறிகள், வளையல், தின்பண்டங்கள், துணிமணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் வியாபாரிகள் வீடு தேடி வந்து விற்பனை செய்கிறார்கள்.

விதி விலக்காக இருந்த மளிகை பொருட்களும் தற்போது வீடு தேடி வரத்தொடங்கிவிட்டது. காய்கறிகள் உள்ளிட்ட சில பொருட்களை வாரத்துக்கு ஒரு முறை வாங்கலாம். ஆனால் மளிகை பொருட்கள் எளிதில் கெட்டுப்போகாது என்பதால் சில்லரையாக அவ்வப்போது கடைக்கு சென்று வாங்குவதை விடவும், ஒரு மாதத்துக்கான பொருட்களையும் மொத்தமாக வாங்குவதையே பெரும்பாலான குடும்ப தலைவிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு மாதத்தின் முதல் நாளிலும், அலுவலகம், கம்பெனிகளில் பணியாற்றுபவர்களுக்கு மாதத்தின் முதல் வாரத்திலும் பெரும்பாலும் சம்பளம் வழங்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் மாத சம்பளதாரர்களை குறிவைத்து சென்னையில் தற்போது ‘5–ந்தேதி மார்க்கெட்’ என்ற புது கலாசாரம் பரவி வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் கடுமையான கிராக்கி நிலவி வருகிறது.

இதன்படி, சென்னை திருவான்மியூர், கொரட்டூர், வில்லிவாக்கம், ஆவடி, மாதவரம், எம்.ஆர்.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரத்தில் வைத்து மளிகை சாமான்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பெரும்பாலான பகுதிகளில் 5–ந்தேதியை அடிப்படையாக வைத்து மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சில இடங்களில் வெவ்வேறு தேதிகளை நிர்ணயித்து, மளிகை சந்தை அமைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.

ஒரு படி (1½ கிலோ எடை) என்ற அளவில் விற்பனை செய்யப்படும் இந்த பொருட்கள், கடைகளில் விற்பனை செய்யப்படுவதோடு ஒப்பிடுகையில் விலை குறைவு என்பதால் குடும்ப தலைவிகளும் மகிழ்ச்சியோடு, ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். 

இவர்களுக்கு ‘5–ந்தேதி மார்க்கெட்’ மாதாந்திர மளிகை சந்தை வரப்பிரசாதமாக அமைகிறது. அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் தரமானதாக இருப்பதோடு, சுத்தமாகவும் இருக்கிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே பெரும்பாலும் இணைந்து சந்தைகளை அமைக்கிறார்கள். சந்தை அமைக்கும் தினத்துக்கு முந்தைய தினம் இரவே அந்த பகுதிகளுக்கு மினி லாரிகளில் பொருட்களை கொண்டு வந்து விடுகிறார்கள். இரவு அங்கேயே தங்கிவிட்டு, அதிகாலையில் மினி லாரிகளில் இருந்து மளிகை மூட்டைகளை அடுக்கி வைத்து விற்பனை செய்கிறார்கள். காலையிலேயே பொருட்களை வாங்குவதற்கு கூட்டம் குவிந்து விடுகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:– 

சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து மொத்த விலைக்கு வாங்கி கொண்டு வந்து, மளிகை சாமான்களை விற்பனை செய்கிறோம். மொத்த விலைக்கு வாங்கி கொண்டு வருவதால், குறைவான லாபம் வைத்து விற்கிறோம். கடை வாடகை கிடையாது, கடையை நடத்துவதற்கான மின்சார கட்டணம் இப்படி எந்தவித கட்டணமும் இல்லாததால் மற்ற கடைகளோடு ஒப்பிடுகையில் குறைவான விலைக்கு எங்களால் கொடுக்க முடிகிறது.

ஆந்திர மாநிலத்திலும் இதுபோன்ற மாதாந்திர மளிகை சந்தைகள் உள்ளன. அங்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோன்றுதான் தற்போது சென்னை நகரத்திலும் மாதாந்திர மளிகை சந்தை பிரபலமாகி வருகிறது. மாத சம்பளம் வாங்குபவர்கள்தான் மளிகை பொருட்களை ஒரு மாதத்துக்கும் சேர்த்து வாங்குவார்கள். இதனால் பெரும்பாலும் மாத சம்பளம் வாங்குபவர்களை குறிவைத்துதான் நாங்கள் விற்பனை செய்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

செலவு மிச்சம்

இதுகுறித்து குடும்ப தலைவிகள் கூறியதாவது:–

மாத சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் நிறைவான தரத்துடன், குறைவான விலையில் இருக்கிறது. மாத பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல இருப்பதால் மாதந்தோறும் அவர்களிடம் பொருட்களை வாங்குகிறோம். ஒவ்வொரு மாதமும் வந்து விற்பனை செய்பவர்கள் என்பதால் வாடிக்கையாளர்களிடம் ஏமாற்றுவது இல்லை. இதேபோன்று குறைவான விலையில் அதிகமான பொருட்களையும் வாங்கி இருப்பு வைக்க முடிகிறது. கடைகளில் வாங்குவதை காட்டிலும் 30 முதல் 40 சதவீதம் வரையிலும் செலவு மிச்சமாகிறது.

விலைவாசி அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், இதேபோன்ற மளிகை சந்தைகள் சென்னையில் பல்வேறு இடங்களில் நடத்துவதற்கு ஊக்குவிக்கப்படவேண்டும். சாலையோரத்தில் யாருக்கும் தொந்தரவு இல்லாத, நெரிசல் இல்லாத இடங்களிலேயே வியாபாரிகள் பொருட்களை வைத்து விற்பனை செய்கின்றனர். இதுபோன்ற கடைகளை அதிகாரிகள் ஊக்குவிக்கவேண்டும். எனவே வியாபாரிகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது. அப்படி தொந்தரவு ஏதேனும் கொடுத்தால் மக்களும் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதிகாரிகளை எதிர்த்து போராட்டத்தை நடத்தவேண்டிய சூழல் ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story