மாவட்ட செய்திகள்

பழனியில் இருந்து கோவைக்கு கண்டக்டர் இல்லாமல் இடைநில்லா அரசு பஸ் சேவை தொடக்கம்: 2 மணி நேரத்தில் செல்கிறது + "||" + Non-stop state bus service from Palani to Coimbatore

பழனியில் இருந்து கோவைக்கு கண்டக்டர் இல்லாமல் இடைநில்லா அரசு பஸ் சேவை தொடக்கம்: 2 மணி நேரத்தில் செல்கிறது

பழனியில் இருந்து கோவைக்கு கண்டக்டர் இல்லாமல் இடைநில்லா அரசு பஸ் சேவை தொடக்கம்: 2 மணி நேரத்தில் செல்கிறது
பழனியில் இருந்து கோவைக்கு இடைநில்லா அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பஸ் பழனியில் இருந்து 2 மணி நேரத்தில் கோவையை சென்றடைகிறது.
பழனி, 

தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மாவட்ட பகுதிகளில் செயல்படும் போக்குவரத்துக்கழகங்களுக்கு 515 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் கோவை அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு வழங்கப்பட்ட பஸ்களில் 3 பஸ்கள் கோவை-பழனி வழித்தடத்தில் இடைநில்லா பஸ்களாக நேற்று முதல் இயக்கப்படுகின்றன.

பழனியில் இருந்து காலை 6.40 மணி, 7.30 மணி மற்றும் 9.30 மணிக்கு கோவைக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக கோவைக்கு 2 மணி நேரத்தில் சென்றடைகிறது. பழனி பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் போதே பயணிகள் ஏற்றப்பட்டு பயணச்சீட்டும் வழங்கப்பட்டுவிடும்.

அதன் பின்னர் அந்த பஸ் கோவை நோக்கி புறப்பட்டு சென்றுவிடும். பஸ்சில் கண்டக்டர் கிடையாது. இதனால் பஸ்சை எந்த இடத்திலும் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல முடியாது. பஸ்சின் கதவு பழனி பஸ் நிலையத்தில் அடைக்கப்பட்ட பிறகு கோவை பஸ் நிலையத்தில்தான் திறக்கப்படும். இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, பழனி-கோவை இடையே இடைநில்லா பஸ்கள் இன்று (அதாவது நேற்று) முதல் இயக்கப்படுகின்றன.

பயணிகளுக்கு விரைவான மற்றும் சொகுசான பயண அனுபவத்தை அளிக்க வேண்டும் என்பதற்காக இடைநில்லா பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த பஸ்களில் சாதாரணமாக கோவைக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் வசூலிக்கப்படும் கட்டண தொகையான ரூ.87 மட்டுமே பயணிகளிடம் வசூல் செய்யப்படும். பழனியில் இருந்து 117 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவைக்கு 2 மணி நேரத்தில் சென்றடையும். இந்த பஸ்களில் பயணிகள் சாய்ந்த நிலையில் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. காலையில் கோவை செல்லும் 3 பஸ்களும் மதிய வேளையில் மீண்டும் பழனியை வந்தடையும். அதன் பின்னர் மதியம் 1.30, 2.30, 3.45 மணிக்கு பழனியில் இருந்து கோவைக்கு இந்த பஸ்கள் புறப்பட்டு செல்லும் என்றனர்.