வருசநாடு அருகே பஞ்சம்தாங்கி மலையில் காட்டுத்தீ: வனத்துறையினர் போராடி அணைத்தனர்


வருசநாடு அருகே பஞ்சம்தாங்கி மலையில் காட்டுத்தீ: வனத்துறையினர் போராடி அணைத்தனர்
x
தினத்தந்தி 7 July 2018 5:30 AM IST (Updated: 7 July 2018 5:19 AM IST)
t-max-icont-min-icon

வருசநாடு அருகே பஞ்சம்தாங்கி மலையில் காட்டுத் தீ பிடித்தது. இதனிடையே வனத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்

கடமலைக்குண்டு,

கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு அருகே பஞ்சம்தாங்கி மலைப்பகுதி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பிடித்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் செடி, கொடிகள், புற்கள் பற்றி எரிந்தன.இது குறித்து தகவலறிந்ததும் வருசநாடு வனச்சரகர் இக்பால் தலைமையிலான வனத்துறையினர் பஞ்சம்தாங்கி மலைப்பகுதிக்கு விரைந்து சென்றனர். பின்னர் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ மளமளவென பரவியதால் தீயை அணைப்பதில் வனத்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டது.

இருப்பினும் வனத்துறையினர் 5 மணி நேரத்துக்கு பிறகு பஞ்சம்தாங்கி மலைப்பகுதியில் பற்றி எரிந்த தீயை முழுமையாக அணைத்தனர். இருப்பினும் மலையில் இருந்த மூலிகை செடிகள், கொடிகள் எரிந்து நாசமாயின. மேலும் தொடர்ந்து அங்கு தீவிபத்து ஏற்படாமல் தடுக்க மலைப் பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக வனச்சரகர் கூறுகையில் ‘காய்ந்த புற்கள் உள்ள பகுதியிலேயே தீ பரவியுள்ளது. மரங்கள் உள்ள பகுதிக்கு காட்டுத் தீ பரவுவதற்குள் முன்பாக முழுமையாக அணைக்கப்பட்டதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை’ என்றார்.

பஞ்சம்தாங்கி மலைப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. எனவே வனத்துறையினர் பஞ்சம்தாங்கி மலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு காட்டுத்தீ ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து கண்டறிய வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story