கோவில்பட்டியில் 7 டன் அரிசி மாவு பறிமுதல் போலீசார் விசாரணை
கோவில்பட்டியில் 7 டன் அரிசி மாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அது ரேஷன் அரிசியில் இருந்து தயாரிக்கப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் 7 டன் அரிசி மாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அது ரேஷன் அரிசியில் இருந்து தயாரிக்கப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிரடி சோதனை
கோவில்பட்டி கிழக்கு பார்க் ரோட்டில் உள்ள லாரி புக்கிங் அலுவலகத்தில் இருந்து, ரேஷன் அரிசியை மாவாக்கி மூட்டைகளில் வெளியூர்களுக்கு கடத்தப்படுவதாக, கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பவுல்ராஜ் (கிழக்கு), விநாயகம் (மேற்கு) மற்றும் போலீசார், அந்த லாரி புக்கிங் அலுவலகத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு தலா 50 கிலோ எடை கொண்ட 137 மூட்டைகளில் மொத்தம் 6 ஆயிரத்து 850 கிலோ அரிசி மாவு இருந்தது. அவற்றில் ஒரு மூட்டையை போலீசார் அவிழ்த்து பார்த்து சோதனை செய்தனர்.
மாவு மில் உரிமையாளர்கள்
பின்னர் இதுதொடர்பாக லாரி புக்கிங் அலுவலக நிர்வாகியான கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்த மரகதலிங்கம் மகன் காளிராஜிடம் (35) போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், கோவில்பட்டி செக்கடி தெருவைச் சேர்ந்த கண்ணன் 66 அரிசி மாவு மூட்டைகளையும், கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த மாரிமுத்து 71 அரிசி மாவு மூட்டைகளையும் மதுரைக்கு அனுப்புவதற்காக கொண்டு வந்து தந்தனர் என்று தெரிவித்தார்.
கண்ணன், கோவில்பட்டி செக்கடி தெருவிலும், மாரிமுத்து, தொழிற்பேட்டையிலும் மாவு மில் நடத்தி வருகின்றனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
பறிமுதல்
மேலும் இதுதொடர்பாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்த பின்னரே, லாரி புக்கிங் அலுவலகத்தில் இருந்த மாவு, ரேஷன் அரிசியில் இருந்து தயாரிக்கப்பட்டதா? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து லாரி புக்கிங் அலுவலகத்தில் இருந்த அரிசி மாவு மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, அங்கேயே வைத்துள்ளனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story