மாவட்ட செய்திகள்

வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழா:பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை + "||" + Champagne Kuttupakon Gurupooja Festival: Advice on security arrangements

வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழா:பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழா:பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழாவையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூரில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி,

வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழாவையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூரில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துகோனின் 308-வது குரு பூஜை விழா வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் தலைமை தாங்கினார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி, வீரன் அழகுமுத்துகோன் வாரிசுகள் மீனாட்சிதேவி, வனஜா, துரைச்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் செல்வகுமார், வீரன் அழகுமுத்துகோன் நலச்சங்க தலைவர் மாரிச்சாமி, செயலாளர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் குமார், தி.மு.க. குமார், யாதவர் கூட்டமைப்பு தலைவர் கணேசன், சமாஜ்வாடி கட்சி வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம் வருமாறு:-

வாகனங்கள் செல்லும் வழித்தடம்

வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழா கொண்டாடப்படும் கிராமங்களில் விழா பொறுப்பாளர்கள் காவல் துறையிடம் உரிய அனுமதி பெற வேண்டும். குருபூஜை விழாவில் அரசியல் கட்சி சம்பந்தமான டிஜிட்டல் பேனர்கள், கொடிகள் கட்டுவதற்கு பஞ்சாயத்து மற்றும் காவல் துறையிடம் அனுமதி பெற்று, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் வைக்க வேண்டும். அவற்றை மாலை 6 மணிக்குள் விழா பொறுப்பாளர்களே அகற்றிட வேண்டும்.

குருபூஜை விழாவுக்கு இருசக்கர வாகனங்களில் வருவதற்கு அனுமதி கிடையாது. சட்டம்-ஒழுங்கு நிலையை கருத்தில்கொண்டு, காவல்துறை அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளை ஏற்று ஒத்துழைக்க வேண்டும். விழாவிற்கு வரும் வாகனங்கள் நாலாட்டின்புத்தூர் சரவணபவன் ஓட்டல் அருகில் உள்ள ஆர்ச் வழியாக கட்டாலங்குளம் செல்ல வேண்டும். விழா முடிந்து நெல்லை மார்க்கமாக திரும்பி செல்லும் வாகனங்கள் செட்டிக்குறிச்சி சந்திப்பில் இருந்து தெற்கு நோக்கி கயத்தாறு வழியாகவும், சங்கரன்கோவில், கோவில்பட்டி, மதுரை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் கழுகுமலை வழியாகவும் செல்ல வேண்டும்.

அனுமதிச்சீட்டு

உரிய அனுமதிச்சீட்டு மற்றும் ஆவணங்களுடன் வாகனங்களில் வர வேண்டும். 3 வாகனங்களுக்கு அதிகமாக தொடர்ச்சியாக செல்லக்கூடாது. மதுபாட்டில்கள், ஆயுதங்களை கண்டிப்பாக கொண்டு வரக்கூடாது. வாகனங்களின் மேற்கூரையிலோ, படியில் தொங்கி கொண்டோ வரக்கூடாது. வாகனங்களின் மேற்கூரையில் கேரியர்களை அகற்றிட வேண்டும். காவல்துறை அனுமதித்த வழித்தடத்தில்தான் வாகனங்கள் செல்ல வேண்டும்.

சட்டம்-ஒழுங்கு சீர்கெடாதவாறு நிகழ்ச்சிகளை சுமுகவாகவும், சிறப்பாகவும் நடத்தி முடிக்க வேண்டும். ஒலிப்பெருக்கியில் மாற்று சமுதாயத்தினர், தனி நபர்கள் குறித்து விமர்சித்து பாடல்கள், வசனங்கள் ஒலிபரப்பக்கூடாது. குறைந்த அளவிலான சத்தத்திலேயே ஒலிப்பெருக்கி கருவிகளை பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரங்களில் அனுமதி பெறப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்த வேண்டும்.

மேற்கண்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.