அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்த வேண்டும் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. வலியுறுத்தல்


அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்த வேண்டும் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 July 2018 9:30 PM GMT (Updated: 7 July 2018 8:23 PM GMT)

தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது. எனவே அமைச்சர்களின் வீடுகளின் வருமான வரித்துறை சோதனை நடத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி எம்.பி. வலியுறுத்தினார்.

நெல்லை, 

தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது. எனவே அமைச்சர்களின் வீடுகளின் வருமான வரித்துறை சோதனை நடத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி எம்.பி. வலியுறுத்தினார்.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி நேற்று நெல்லை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முட்டை வினியோகத்தில் வரி ஏய்ப்பு

தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் முட்டை வினியோகம் செய்வதில் வரி ஏய்ப்பு செய்ததாக பல்வேறு நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டை காட்டுகிறது.

அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது. பல அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டு உள்ளனர். எந்தெந்த அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளார்கள்? என்ற பட்டியல், மத்திய அரசிடம் தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும்.

8 வழி சாலை திட்டம்

தி.மு.க.வை பொறுத்தவரையில் நல்ல திட்டங்களை ஆதரிக்கும். சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும். ஆனால் இந்த அரசு மக்களிடம் கருத்து கேட்காமல் திட்டத்தை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுகிறது. இதில் ஏதோ உள்நோக்கம் இருப்பது தெரிகிறது. இந்த திட்டத்துக்கு காட்டும் வேகம் சேது சமுத்திர திட்டத்தில் காட்டியிருக்கலாம். அப்படி காட்டியிருந்தால் சேது சமுத்திர திட்டம் நிறைவடைந்து இருக்கும். தென் மாவட்ட மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டு இருக்கும்.

செயல்படாத தலைவர் மு.க.ஸ்டாலின் என்று மு.க.அழகிரி கூறுகிறார். அவருடைய பேச்சை நாங்கள் பெரிதாக எடுத்து கொள்வது இல்லை. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதிக்கு அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலினை நாங்கள் பார்க்கிறோம். மக்கள் பிரச்சினைக்கு தொடர்ந்து அவர் போராடி வருகிறார். அவருடைய தலைமையை ஏற்று நாங்கள் செயல்பட தயாராக இருக்கிறோம். கண்டக்டர்கள் இல்லாத பஸ்களை தமிழக அரசு இயக்கி வருகிறது. இதை காரணம் காட்டி அரசு போக்குவரத்து தொழிலாளர்களை குறைக்கக் கூடாது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. அந்த தேர்தலோடு சேர்ந்து சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் இரா.ஆவுடையப்பன் (கிழக்கு), அப்துல்வகாப் (மத்திய), சிவபத்மநாதன் (மேற்கு) மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story