போலி பணி ஆணை கொடுத்து 8 பேரிடம் ரூ.24 லட்சம் மோசடி சட்டத்துறை பணியாளர் கைது
தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி ஆணை கொடுத்து 8 பேரிடம் ரூ.24 லட்சத்தை மோசடி செய்ததாக தலைமை செயலக சட்டத்துறை பணியாளரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி ஆணை கொடுத்து சட்டத்துறை பணியாளர் பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார். இதுதொடர்பாக பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த பாலாஜி கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
போலி ஆணை மூலம் ரூ.24 லட்சம் மோசடி
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டத்துறை அலுவலகத்தில் உதவியாளராக ஆர்.கே.நகர் கொருக்குப்பேட்டையை சேர்ந்த ராம் என்ற குணசேகரன் பணியாற்றி வருகிறார். நான் உள்பட 8 பேருக்கு தலைமை செயலகத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி, தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.24 லட்சம் வாங்கினார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர் எங்களுக்கான பணி ஆணையையும் வழங்கினார்.
ஆனால் அது போலி பணி ஆணை என்பது பின்னர் தெரியவந்தது. இதுதொடர்பாக அவரிடம் முறையிட்டபோது அவர் பணத்தை தரவில்லை. அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சட்டத்துறை பணியாளர் கைது
அதன்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பணத்தை திருப்பி தருவதாக போலீசாரிடம் உத்தரவாதம் அளித்தார். எனினும் போலி பணி ஆணை வழங்கியது தொடர்பாக அவரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story