டி.கல்லுப்பட்டியில் நிதி நிறுவனத்தில் திருடிய ஊழியர்கள் 4 பேர் கைது


டி.கல்லுப்பட்டியில் நிதி நிறுவனத்தில் திருடிய ஊழியர்கள் 4 பேர் கைது
x
தினத்தந்தி 8 July 2018 10:15 PM GMT (Updated: 8 July 2018 7:58 PM GMT)

டி.கல்லுப்பட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியர்களே வசூல் பணத்தை திருடியது அம்பலமானது. அதைத்தொடர்ந்து போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

பேரையூர்,

டி.கல்லுப்பட்டி காளியம்மன் கோவில் திடல் அருகே குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இங்கு வேலை செய்யும் முத்துசெல்வம், செல்வராஜ், வினோத் ஆகியோர் தவணை வசூல் செய்த பணம் 5 லட்சத்தை நிறுவனத்தில் வைத்திருந்தனர். பின்பு இரவு 8.30 மணிக்கு நிறுவனத்தை ஊழியர் முத்துசெல்வம் பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலை நிறுவனத்தை திறக்க வந்த போது கதவின் பூட்டுகள் உடைக்கப்படாமல் திறந்த நிலையில் இருந்தது.

உடனே நிறுவனத்தின் உயர் அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் வந்து பார்த்த போது நிறுவனத்தில் வைத்து இருந்த ரூ.5 லட்சம் திருடு போய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நிறுவன மண்டல மேலாளர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் விஜயகாண்டிபன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் ஊழியர்களிடம் விசாரணை செய்தனர். அதில் நிறுவனத்தின் சாவி முத்துசெல்வத்திடம் இருப்பது தெரிந்து, அவரிடம் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.


நிதிநிறுவன கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்படாமல் திறந்து இருப்பதை வைத்து சந்தேகம் அடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில் முத்துசெல்வத்துடன், வினோத், செல்வராஜ் ஆகியோரும், இதே நிதி நிறுவனத்தின் வேறு கிளையில் பணிபுரியும் காளிராஜ் என்பவரும் சேர்ந்து நிதி நிறுவனத்தில் இருந்த ரூ.5 லட்சத்தை திட்டம் போட்டு திருடியதை ஒப்புக்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த ரூ.5 லட்சத்தை கைப்பற்றினர். 24 மணி நேரத்தில் திருட்டு சம்பவத்தை போலீசார் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story