கார்-மோட்டார் சைக்கிள் மோதி நடுரோட்டில் தூக்கி வீசப்பட்ட தம்பதி லாரி மோதி பலி


கார்-மோட்டார் சைக்கிள் மோதி நடுரோட்டில் தூக்கி வீசப்பட்ட தம்பதி லாரி மோதி பலி
x
தினத்தந்தி 9 July 2018 4:15 AM IST (Updated: 9 July 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்ட தம்பதி லாரி மோதி பலியானார்கள்.

காங்கேயம், 

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புழுதிக்குட்டையை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 35). இவர் பேளூரில் ஸ்டுடியோ நடத்தி வந்தார். இவருடைய மனைவி மகேஸ்வரி (32). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நால்ரோட்டில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக வேலை பார்த்து வரும் கோவிந்தராஜின் அண்ணன் சண்முகராஜின் குழந்தையை பார்க்க கோவிந்தராஜ் முடிவு செய்தார்.

அதன்படி கோவிந்தராஜூம், அவருடைய மனைவி மகேஸ்வரியும் ஒரு மோட்டார் சைக்கிளில் புழுதிக்குட்டையில் இருந்து காங்கேயம் நால்ரோடுக்கு நேற்று முன்தினம் வந்தனர். பின்னர் அன்று இரவு சண்முகராஜின் வீட்டில் தங்கி விட்டு, நேற்று மதியம் மீண்டும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப் பட்டனர்.

மோட்டார் சைக்கிளை கோவிந்தராஜ் ஓட்டினார். பின் இருக்கையில் மகேஸ்வரி அமர்ந்து இருந்தார். காங்கேயம்-சென்னிமலை சாலையில் சாவடி பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே சென்னிமலையில் இருந்து காங்கேயம் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக காரும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து கோவிந்தராஜூம், அவருடைய மனைவி மகேஸ்வரியும் தூக்கி வீசப்பட்டு நடுரோட்டில் விழுந்தனர்.

அந்த சமயம் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி கண் இமைக்கும் நேரத்தில் கணவன்-மனைவி மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தம்பதி இருவரும் உடல் நசுங்கி பலியானார்கள்.

இந்த விபத்து குறித்து சண்முகராஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் விரைந்து சென்று, தம்பி மற்றும் தம்பியின் மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் காங்கேயம் போலீசார் விரைந்து சென்று இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Next Story