குழந்தை கடத்தல் கும்பல் என கருதி மனநோயாளி மீது தாக்குதல்
வேலூர் கொணவட்டத்தில் குழந்தை கடத்துபவர் என கருதி மனநோயாளி மீது பொதுமக்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர், ஜூலை.9-
நாடு முழுவதும் வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்கள் இடம் தெரியாமல் தவிக்கும்போது குழந்தை கடத்த வந்திருப்பதாக கருதி பல இடங்களில் அவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. சமூக வலைத்தளங்களில் பரவிய தவறான தகவலை உண்மையென நம்பியதே பொதுமக்கள் தாக்கியதற்கு காரணமாக அமைந்துள்ளது.
வேலூர், திருவண்ணாமலை மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என கருதி சந்தேக நபர்கள் மீது பொதுமக்கள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்தன. திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் சாமி கும்பிட வந்த 5 பேர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து அனைத்து மாவட்ட காவல்துறை மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
எனினும் வேலூர் மாவட்டத்தில் இது போன்ற பிரச்சினை மீண்டும் தலை தூக்கியுள்ளது.
வேலூர் கொணவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 35 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது அவர் அங்குள்ள ஒரு குழந்தையிடம் விளையாடியதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த பொதுமக்கள் அவரை குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் எனக்கருதி பிடித்து விசாரணை செய்தனர். அவர் இந்தி மொழியில் பேசியதால் பொதுமக்களுக்கு புரியவில்லை. இதையடுத்து அவரை பொதுமக்கள் தாக்க தொடங்கினர்.
பின்னர் அங்கு வந்த இளைஞர்கள் வடமாநிலத்தவர் தாக்கப்படுவதை பார்த்து தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் அங்கு வந்து அந்த சந்தேக நபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அதில் அவர் மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளி என்பதும், அவர் மேற்குவங்காளத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவருக்கு காயங்கள் இருந்ததால் அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது குடும்பத்தினரிடம் அவரை ஒப்படைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர் குறித்த விவரம் சரியாக தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கொணவட்டம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story