திம்பம் மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கிய லாரி டிரைவர் உயிர் தப்பினார்
திம்பம் மலைப்பாதையில் அந்தரத்தில் லாரி தொங்கியது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தாளவாடி,
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து ஈரோட்டுக்கு நேற்று மாலை 4 மணி அளவில் டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை சத்தியமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் ஓட்டினார்.
இந்த லாரி நேற்று மாலை 4 மணி அளவில் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் 19-வது கொண்டை ஊசி வளைவில் குறுகிய வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் முன்சக்கரம் ரோட்டோர பள்ளத்தில் இறங்கியது. இதில் அந்தரத்தில் தொங்கியபடி லாரி நின்றது.
உடனே டிரைவர் சுரேஷ் லாரியில் இருந்து வெளியே குதித்தார். இதில் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதன் காரணமாக திம்பம் மலைப்பாதை வழியாக பஸ், கார், லாரி, வேன், இருசக்கர வாகனம் உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. வாகனங்கள் நடுவழியில் ஆங்காங்கே நின்றன.
சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா சென்ற வாகனங்கள் பண்ணாரி சோதனை சாவடியிலும், அங்கிருந்து தமிழகம் வரும் வாகனங்கள் ஆசனூர் சோதனைச்சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டன. இதைதத்தொடர்ந்து பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்கும் பணி நடந்தது. சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு லாரி மீட்கப்பட்டது. அதன்பிறகே போக்குவரத்து நிலமை சீரானது.
திம்பம் மலைப்பாதையில் லாரி அந்தரத்தில் தொங்கியதால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story